சிறப்பு செய்திகள்

கழக கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது – தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் முழக்கம்…

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் ஸ்டாலினுக்கு மக்கள் இத்தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது என்பதால் தோல்வி பயத்தில் எதிர்க்கட்சியினர் உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக விமர்சித்தார். 

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் உறுதியாக நிறைவேற்றித்தரப்படும். நாடுவளம் பெற, செழிக்க திறமையான, உறுதியான, வலிமையான தலைமை வேண்டும். அந்த தலைமை பொறுப்புக்கு தகுதி வாய்ந்தவர் பாரத பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடி. அவர் மீண்டும் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் எனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை அறிவிக்கின்ற அரசு, அம்மாவின் அரசு. அதனால் தான் இந்த ஆட்சியில் அனைத்துதரப்பு மக்களும் பயனடைகிறார்கள்.

அ.இ.அ.தி.மு.க தலைமையிலான இந்த கூட்டணிக்கு மக்கள் அளிக்கின்ற ஆதரவைப் பார்த்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறாமை கொண்டு மேடையில் என்ன பேசுவதென்றே தெரியாமல், தன்னையே மறந்து பேசி வருகிறார். இதற்குக் காரணம் அவருக்கு தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வி பயம் தான். தி.மு.க பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. உண்மைக்கு மாறான, நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளையும் அளித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் மக்களுக்கு எந்த திட்டத்தை அளிக்க முடியுமோ, எதை செயல்படுத்த முடியுமோ அதை மட்டும் தான் வாக்குறுதியாக அளிக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டிய அரசு, அம்மாவின் அரசு.நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், எதிர் கட்சிகளின் தூண்டுதலின் பேரில், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டம் நடத்தியவர்களை அழைத்துப்பேசி, அவர்களை சமாதானப்படுத்தி, அதிலும் வெற்றி கண்ட அரசு, அம்மாவின் அரசு. மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி மக்கள் பணி ஆற்றவேண்டும். அப்போது தான் அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். அனைத்துத்தரப்பு மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையை பெற்ற அரசு அம்மாவின் அரசு.

2011-ல் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் ஆனால் 2016-17ல் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 46.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோன்று, சுகாதாரத்துறையின் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையின் காரணமாக குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்போது பேசினாலும், முதலமைச்சர் கே.பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறுகிறார். எப்போதுமே முதலமைச்சர் பதவி மீது ஒரு கண்ணாகவே இருக்கிறார். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். மக்கள் அளித்தால் அதை அவர் வாங்கிக்கொள்ளட்டும். எனக்கு பதவி ஆசை கிடையாது. மக்கள் அளித்த பேராதரவின் மூலமாக, அம்மாவின் ஆசியோடு, முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் பணி ஆற்றி வருகிறேன். யாரை முதலமைச்சர் ஆக்குவது என்று முடிவு செய்பவர்கள் மக்கள் தான்.

எனவே, பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஸ்டாலின் எப்போதுமே பொய்யைத்தான் சொல்லி வருகிறார். பொய் சொல்வதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அதனை ஸ்டாலினுக்குத்தான் வழங்க வேண்டும். அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை என்பதை அனைவரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, மக்கள் விழிப்புணர்வோடு இருந்து அ.இ.அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு மாம்பழம் சின்னத்திலும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் மரகதம்குமரவேலுக்கு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், வாக்களித்து வெற்றிபெறச்செய்யுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.