தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு..

மதுரை:-

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே கழக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை வடக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அவரது வெற்றி உறுதியாகி விட்டது. இதுமட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் கழக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் ஏதோ உத்தமன் போல தனிநபர் தாக்குதலை நடத்தி வருகிறார். 2006 முதல் 2011 வரை அவர் தனது அண்ணன் மு.க.அழகிரிக்கு பயந்து மதுரைக்கு வர முடியவில்லை. அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால் 2011-ல் அம்மா ஆட்சி வந்தவுடன் ஸ்டாலின் சுதந்திரமாக மதுரைக்கு வந்து சென்றார். யார் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது. இதை ஸ்டாலின் மறுக்க முடியுமா? ஆனால் இன்றைக்கு ஆட்சியில் ஏதாவது குற்றங்கள் மற்றும் ஊழல்கள் இருப்பதை நிரூபிக்க முடியுமா? அவரால் முடியாது. ஏனென்றால் எங்கள் ஆட்சி அம்மாவின் ஆட்சி, அம்மா அவர்கள் காட்டிய வழியே இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. ஊழல் கூட்டணியான தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புரட்சித்தலைவரின் புனித சின்னமான இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பிரச்சாரம் பேசினார்.

பிரச்சாரத்தின்போது மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, மாவட்ட கழக துணை செயலாளர் சி.தங்கம், பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், கே.ஜெயவேல் உள்பட பலர் உடன் சென்றனர்.