தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது – ரங்கசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை…

புதுச்சேரி:-

கழக கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது. 40 தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதி முதன்மையானதாக விளங்கும் என்று ரங்கசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்தனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதனையடுத்துநேற்று புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைமை தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணிக்காக தமிழக முதல்வர், துணை முதல்வரை சந்தித்து பேசியபோது, அம்மா இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்கிறோம். 40 தொகுதியிலும் முழு வெற்றி பெற வேண்டும். அதற்காக புதுச்சேரி தொகுதியை உங்களுக்கு தருகிறோம். உங்களது வெற்றிக்கு கழகத்தினர் நன்றாக உழைப்பார்கள். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தர வேண்டும்.
என்.ஆர்.காங்கிரஸ், கழக கூட்டணி சந்தர்ப்பவாதத்திற்கு அமைந்த கூட்டணி கிடையாது. இயற்கையாகவே அமைந்த கூட்டணி. என்.ஆர்.காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டவுடன் கழகத்துடன்தான் முதன் முதலில் கூட்டணி வைத்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிறிய இடைவெளி வந்துவிட்டது. அதற்கு அத்தேர்தல் இறுதி நேரத்தில் அம்மாவை சந்தித்து பேச முடியாததுதான் காரணம். அதனால் தனித்தனியாக போட்டியிட்டோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் இணைந்து போட்டியிட்டு இருந்தால் எவ்வளவோ வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கலாம். இணைந்து போட்டியிடாததால் மக்களுக்கு விரோதமானவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். இப்ப ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் அனைவரும் பேச தொடங்கி விட்டனர். அதற்காக நாம் இத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

நமது கூட்டணி பலமான கூட்டணியாக அமைந்துள்ளது. பாஜக, பாமக, தேமுதிக மற்றும் பல்வேறு கட்சிகள் நம்மிடம்தான் உள்ளன. அவர்களும் ஓட்டு கேட்கும்போது நமக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். தமிழக முதல்வர், துணை முதல்வர் கூறியதுபோல் அம்மா இல்லாததால் முழுமையான வெற்றிக்கு பாடுபட வேண்டும். புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். புதுச்சேரி சீட்டை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கழக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசியதாவது:-

புதுச்சேரியில் கழகம், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர்களை ரங்கசாமி சந்தித்து பேசி, புதுச்சேரி தொகுதியை ஒதுக்க கேட்டு கொண்டார். அவர் கேட்டு கொண்டதன் பேரில் முதன்மையாக புதுச்சேரி தொகுதி கொடுத்துள்ளனர். பிற கட்சிகளுடன் கூட்டணி முடிவு ஆனாலும் எந்த தொகுதி யாருக்கு என்று முடிவு ஆகவில்லை. தேர்தல் அறிவிக்கும் முன்பே என்.ஆர்.காங்., கழக கூட்டணி புதுச்சேரியில் உதயமாகியுள்ளது. எனவே 40 தொகுதியில் புதுச்சேரி முதன்மையாக வெற்றியை பெறும்.

என்.ஆர்.காங்கிரஸ் கழக கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணியாக காங்கிரஸ் கூறுகிறது. இக்கூட்டணி அமைந்தவுடன் பயம் வந்துவிட்டது. கூட்டணிக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நான், நீ என சீட் கேட்டனர். தற்போது வலுவான கூட்டணி என்பதால் பயப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் யார் நிற்கின்றீர்கள் என கேட்டனர். யாரும் நிற்க முன் வராததால் தற்போது திமுக முன்னாள் மத்திய அமைச்சரை சந்தித்து உங்கள் மகனை நிறுத்துங்கள் என கேட்கின்றனர். நமது வெற்றி 100 சதவீத உறுதி செய்யப்பட்டது.

முதல் தேர்தலில் அஇஅதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். அஇஅதிமுகவிற்கு 5 எம்.எல்.ஏ. வந்தது. நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் ரங்கசாமி கழக வேட்பாளர்க்கு பிரச்சாரம் செய்தார். என்.ஆர்.காங்கிரஸ் 15 எம்.எல்.ஏ.க்களையும், அஇஅதிமுக 5 எம்.எல்.ஏ.க்களையும் மட்டுமே இருந்தாலும் ராஜ்யசபா சீட்டை அஇஅதிமுகவிற்குத்தான் விட்டு கொடுத்தார். மூன்று ஆண்டாக புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளது. ஆட்சியில் என்ன செய்தார்களோ அதை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க வேண்டும்.

காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். ரங்கசாமி ஆட்சி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தாமல், நிறுத்திவிட்டனர். மக்களே காங்கிரஸ் அரசு மீது வெறுப்பில் உள்ளனர். அனைத்து திட்டமும் கிடப்பில் உள்ளதால் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். இந்த தேர்தலில் அஇஅதிமுக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.