சிறப்பு செய்திகள்

கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 4 மாவட்ட தலைநகரங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் – முதலமைச்சர் தகவல்…

சேலம் :-

கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 4 மாவட்ட தலைநகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்வார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் கழக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டதை முடித்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என கழக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். இதை செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை தொடங்க அனுமதி கேட்டிருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்படும். சட்டப்பேரவையில் தெரிவித்தபடி கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை பொய் வாக்குறுதிகளை கூறியுள்ளனா். அவர்கள் எப்போதும் சொன்னதை செய்ததில்லை. கழக அரசு சொல்லாததையும் செய்துள்ளது.  மக்களவைத் தேர்தலையொட்டி கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம். 4 மாவட்ட தலைநகரங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகங்களில் வெளியாகும் கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகளாக உள்ளது. கழகம் தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் புதுவையிலும் நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.