தற்போதைய செய்திகள்

கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகி விட்டது – அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு…

தருமபுரி:-

கழக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் ஏ.கோவிந்தசாமியை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே.பி.அன்பழகன், தருமபுரி ஒன்றியம் நல்லசேனஅள்ளி, நூல அள்ளி, முக்கல் நாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தமிழகத்தில் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் கழக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் கழக அரசுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். தருமபுரி மாவட்டத்தில் அம்மாவின் அரசு செய்துள்ள சாதனை திட்டங்களால் கழக கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

பிரச்சாரத்தின் போது கழக நிர்வாகிகள் மல்லன், கோபால், மோகன், சிவக்குமார், பா.ம.க. மாவட்ட தலைவர் மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.