சிறப்பு செய்திகள்

கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம்…

ராமநாதபுரம்;-

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கொளுத்தும் வெயிலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் காலை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து மானாமதுரை, திருபுவனம் ஆகிய இடங்களில் கொளுத்தும் வெயிலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். துணை முதலமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவகங்கை மாவட்ட எல்லையில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி. தலைமையிலும், ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையிலும் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் அரண்மனை வீதியில் பிரச்சாரத்தின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இராமநாதபுரம் பகுதி கழகப் பணியினை நிறைவாகவும், பொறுப்பாகவும், தேர்தல் களப் பணிகளை பொறுப்போடும், கடமையுணர்வோடும் பணியாற்றிக் கொண்டிருக்கிற அதிமுக நிர்வாகிகளே, பொறுப்பாளர்களே மற்றும் மெகா கூட்டணியை, வெற்றிக் கூட்டணியை வெற்றி பெற உழைத்துக் கொண்டிருக்கிற தோழமைக்கட்சி பொறுப்பாளர்களே, நிர்வாகிகளே அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நல்லபல திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து, இத்தொகுதியில் மத்திய-மாநில அரசின் பல்நோக்கு திட்டங்கள், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து, நல்ல முறையில் செயல்படும் குறிக்கோள் கொண்ட நல்ல வேட்பாளரை, திறமையான வேட்பாளரை நமது வெற்றிக் கூட்டணி சார்பாக நிற்க வைத்துள்ளோம். இத்தொகுதிக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்த்து இத்தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்று இந்த நல்ல நேரத்தில் உங்களுக்கு தெரிவித்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த காலத்தில், மத்தியில் 10 ஆண்டுக்காலம், திமுக அங்கம் வகித்து 9 அமைச்சர்கள் இருந்தார்கள், அந்த அமைச்சர்கள் எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தினையும், நல்லவொரு திட்டத்தினையும் தமிழக மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை. நாம் காலம் காலமாக பெற்றுவந்த ஜீவாதார உரிமைகளை இப்பொழுது கூட்டியிருக்கின்ற கூட்டணிதான் அப்பொழுதும் அமைத்திருந்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை இலங்கை தமிழ்கள் இலங்கையில் அல்லல்பட்டு இருந்தார்கள் அங்கு சம உரிமை கேட்டார்கள் ஆண்டுக்கொண்டிருந்த ராஜபக்சே கொடுக்க மறுத்துவிட்டார்.

இதன் காரணமாக அங்கு 2009 ல் மிகப்பெரிய போர் நடைபெற்றது. அப்பொழுது காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தவர்களுக்கு ஏற்கனவே உளவுத்துறையின் மூலம் அவர்களுக்கு தெரியும் அங்கு போர் நடைபெற இருக்கின்றது என்று. அவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தால் போதும், அதுமட்டும் இல்லாமல் இந்திய இராணுவ தளவாடங்கள் இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க அங்கு அனுப்பப்பட்டது.

அப்பொழுது கருணாநிதி ஒரு நாடகம் ஆடினார் உண்ணாவிரதம் இருந்தேன் என்றார் நான் தான் மத்திய அரசிடம் சொல்லி போர் நிறுத்தப்பட்டது என்று சொன்னார்கள். அதை நம்பி இலங்கை தமிழர்கள் பதுங்கு குழியில் இருந்த 40,000 குழந்தைகள் மீது குண்டுமழை பொழிந்ததால் அவர்கள் இறந்தார்கள். நாற்பதாயிரம் குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம் அன்று ஆண்டுக் கொண்டிருந்த காங்கிரசாரும், திமுகவும் தான் இதனால் என்ன பயன் இலங்கையில் 4,00,000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அதுமட்டும் இல்லாமல் 5,00,000 பேர் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களை காப்பாற்ற முடியாத ஆட்சியாக அப்பொழுது இருந்து வந்தது. மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் இலங்கை தமிழ் மக்களுக்காக நாங்கள் போராடுகின்றோம் என நாடகமாடிக் கொண்டு, அக்கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் ராஜபக்ஷேவிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியது மக்களுக்கு தெரியாதா என்ன,

சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்ததற்கு ஏதாவது முயற்சி செய்தார்களா, இல்லை. ஆனால் அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய தைரியமான ஒரே தலைவி, நமது அம்மா அவர்கள் மட்டுமே என்பதை இந்த நல்ல தருணத்தில் மக்களுக்கு நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

அம்மா அவர்கள் 2011-ல் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, தொலைநோக்கு திட்டம் என்றால் நம் எதிர்கால சந்ததியினருக்கு 500 ஆண்டு காலம் பயன்தரக்கூடிய வகையில் உள்ள திட்டங்களை அம்மா அவர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிறைவாக செய்யவேண்டுமென்று என்று எண்ணிதான், 20 கிலோ அரிசியை மாதந்தோறும் விலையில்லா அரிசியாக வழங்கினார்கள்,

தொலைநோக்கு திட்டமாக 2023ல், ரூ.15 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு துறைகள் மூலமாக அரிய பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். அத்திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் பொருளாதார நிலை உயர்வதற்கும், வாழ்வில் அடித்தளத்தில் உள்ள மக்கள் மேல்தட்டில் உள்ள மக்களுக்கு இணையாக தன்னுடைய வாழ்க்கை நடைமுறையினை சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிதான் அம்மா அவர்கள் தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தார்கள்,

தமிழகத்தில் ஏழை, எளிய குடிசை வாழும் மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆக 2021க்குள் தமிழகத்தை குடிசை பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக குடிசை பகுதிகளற்ற மாநகராட்சிகளாக உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அம்மா அவர்கள் ஆட்சியில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25,000/- ஐயும், பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50,000/-ம் ஆகவும், தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார்கள். மீண்டும் தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில் அம்மா அவர்களின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி, அம்மா அவர்களின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

பேறுகால நிதிஉதவி ரூ.6000/- இருந்தது 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18,000/- மாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார் இன்று நாங்கள் வழங்கி கொண்டிருக்கிறோம்.மாணவ செல்வங்களுக்காக அதிக நிதியை கல்விக்காக, கல்வி துறைக்கு ஒதுக்கி 16 வகையான கல்வி உபகரணங்கள், மாணவ செல்வங்களுக்கு இலவச பாடப்புத்தகம், இலவச லேப்டாப், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கினார்கள். இத்தகைய உன்னதமான திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் என்று சொல்வதற்கு இங்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும் பெண்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, மீண்டும் வீட்டில் பிள்ளைகளை பராமரிப்பது போன்று ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களுக்கு, அதுவும் தமிழகத்தில் நிறைய தாய்மார்கள் உள்ளனர் என்பதால் அம்மா அரசின் சார்பாக, பெண்களின் சுமையை குறைப்பதற்காக 5 ஆண்டுகாலமாக விலையில்லா அரிசி வழங்கி குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கினார்கள்.

இவ்வாறு பார்த்து, பார்த்து இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் வழியில் நடக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என்பதற்காக தற்போது பொங்கல் பரிசுடன் ரூ.1,000/- சேர்த்து இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசு வழங்குகிறது.

மழை பெய்யாமல் விவசாயிகள் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அம்மா அவர்களின் ஆட்சியில் நாங்கள் இப்போதுக் கூட நாங்கள் ஏழை கூலி தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ரூ2,000/-ஐ வழங்கி கொண்டிருந்தோம். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக கட்சிக்காரர்கள் உயர்நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றார்கள். இத்தடையினை நிதிமன்றத்தின் மூலம் நீக்கி, மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஆணித்தனமாக வழங்குவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மாவின் ஆட்சியில் உழைக்கும் மகளிர்களுக்கு பணிக்கு சென்றுவருவதற்கு ஏதுவாகவும், பிள்ளைகளை பள்ளி அழைத்து சென்றுவருவதற்கு ஏதுவாகவும் மானிய விலை அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் நிறைவேற்றினார். இத்திட்டத்தினை அம்மாவின் வழியில் நடக்கும் அரசு இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறது.வன்முறை கலாச்சாரம், நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, வன்கொடுமை போன்ற செயல்களில் ஈடுப்பட்டு, பல்வேறு குற்றசாட்டுகளுடன் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி திமுக தான். அதிமுக ஆட்சி நாடாளுமன்ற தேர்தலுடன் இருக்காது, இத்தோடு முடிந்துவிடும், அதிமுக இயக்கம் தலைதூக்காது என்று நினைத்திருந்தார்கள்,

அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டு அம்மா அவர்களால் பாதுகாக்கப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆலம் விழுதுகளாக ஊன்றி ஆல மரமாக எந்த சுனாமி வந்தாலும் அசையாது, புயல் வந்தாலும் அசையாது, பூகம்பம் வந்தாலும் அசையாது, எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதயதெய்வம் அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அவர்களின் கட்டுப்பாட்டில் வளர்ந்த நாங்கள் மக்களுக்கு தொண்டு செய்வதே மகத்தானது, மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று உயரிய குறிக்கோளுடன் வாழ்ந்த அம்மா அவர்களின் வழியில் இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டு மனசாட்சியோடு ஆட்சி செய்து வருகிறோம். நல்லபல திட்டங்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் தந்தை கருணாநிதி அவர்களாலேயே அதிமுகாவை அழிக்க முடியவில்லை, உங்களால் முடியவே முடியாது.எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தமிழ்நாட்டினை தீ வைத்து கொளுத்தியதாக பொய் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் தான் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, மாமன் மச்சான் சண்டையில் மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தினை எரித்து தீவைத்து கொளுத்தி மூன்று நபர்களை உயிரிழந்தார்கள், அக்குற்றத்திற்காக நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று அனுபவித்து வருகிறார்கள்.

அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் திமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து செய்து அராஜகமாக பிடுங்கிய நிலங்களை உரிமையாளர்களுக்கு மீண்டும் மீட்டுக் கொடுத்தார். எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின் யாரோ ஒருவர் பேச்சை கேட்டுக் கொண்டு கலர்-கலராக மஞ்சள், பச்சை, சிவப்பு என சட்டை அணிந்து கொண்டு, நமக்கு நாமே திட்டம் என சொல்லிக்கொண்டு எப்படியாவது முதலமைச்சராகிவிடலாம் என கனவு கண்டுக்கொண்டு சைக்கிளில் வருகிறார், டிராக்டரில் வருகிறார், கரும்பு தோட்டத்தில் பூந்து வரும்போது சிமெண்ட் ரோடு போட்டுதான் வருவாராமா, ஆட்டோவில் வருகிறார், டீக்கடையில் டீ குடிக்கிறார், நம்ம டீக்கடையே நடத்தியிருக்கிறோம், இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டு, பொய் பிரச்சராத்தை பரப்பிக் கொண்டு வித்தை காட்டி வருகிறார், இந்த வித்தை நம்மிடம் பலிக்காது, மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள்.

தி.மு.க-காரர்கள் பரோட்டா, பிரியாணி கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க வேண்டாமா? காசு கேட்டால் வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு பல்வேறு குற்றசாட்டுகளுடன், காட்டு-தர்பார் ஆட்சி செய்த திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான், வன்முறை கட்டவிழ்த்துவிடுவதில் திறமையான ஒரே கட்சி திமுக தான். மேலிருந்து அம்மா அவர்கள் எங்களை எப்படி ஆட்சி செய்கிறோம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறுபான்மையினர் மக்களுக்காக புனித யாத்திரை மெக்காவிற்கு, ஜெருசேலம் செல்வதற்கு சலுகை, புனித ரம்லான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு 4500 மெட்ரிக் டன் அரிசி போன்ற சலுகைகளை வழங்கி அனைத்து சமுகத்திற்கும் பாதுகாப்பு அரணாகவும், அனைத்து தரப்பு மக்களையும், ஒரு தாய் மக்களாக பார்த்து இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நடக்கும் எங்கள் ஆட்சியில் தொடர்ந்து இதை செய்து தமிழ்நாட்டில் சாதி சண்டை, மத சண்டையில்லாமல் அமைதி பூங்காவாக காத்து வருகிறோம்.

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 கிராம விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக இழப்பீட்டு தொகையை அளிக்க ரூபாய் 174.6 கோடி நிதியும் மற்றும் 171 கிராம விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக இழப்பீட்டு தொகையை ரூபாய் 271.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் உங்கள் கணக்கிற்கு வந்து சேரும் என்ற நல்ல செய்தியை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்களாகிய நீங்கள் எடைப்போட்டு பார்க்கும் எஜமானர்களாகவும், நீதிபதிகளாக இருந்து, தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் இராநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நமது பா.ஜ.க வேட்பாளர்நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்துமாறு உங்களது பொற்பாதம் வணங்கி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாளும் நமதே, நாற்பதும் நமதே

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.