ராமநாதபுரம்

கழக கூட்டணி வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் – எம்.ஏ.முனியசாமி நம்பிக்கை…

ராமநாதபுரம்:-

கழக கூட்டணி வேட்பாளர்கள் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கழக வேட்பாளர் சதன் பிரபாகரனுக்கு இரட்டைஇலை சின்னத்திற்கும், ராமநாதபுரம் நாடாளுமன்ற கூட்டணி கட்சி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்திற்கும், வாக்கு சேகரித்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டு காலம் இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் மதக்கலவரம் நிகழாமல் நாட்டை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்தியவர் பிரதமர் மோடி. இந்தியாவை வழிநடத்துகிற பிரதமராக இருப்பவர் தான் மோடி.ஸ்டாலின் கை காட்டியவர் கவுன்சிலராக கூட வர முடியாத நிலையில் எப்படி பிரதமராக முடியும்? காங்கிரஸ் கட்சியை மக்கள் கை கழுவும் நேரம் வந்து விட்டது. வரும் தேர்தல் முடிவுக்கு பின்பு திமுகவிற்கு மக்கள் சீல் வைத்துவிடுவார்கள்.

இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்தி என ஸ்டாலின் முன்மொழிந்தார். ஆனால் மேற்கு வங்கத்தில மம்தா பானர்ஜி கூட்டிய மாநாட்டில் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. இதுதான் ஸ்டாலின் நிலைப்பாடு. கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் ஆதரவோடும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன், பரமக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் சதன் பிரபாகரன் இருவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விரைவில் ஒரு மத்திய அமைச்சர் வருவார். கழக அரசின் ஒத்துழைப்போடு மோடி தான் மீண்டும் நாட்டின் பிரதமராக பதவியேற்பார். என்னுடன் இணைந்து தேர்தல் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூறினார்.