மதுரை

கழக கூட்டணி 40 இடங்களில் வென்றது என்ற வரலாறு உருவாகும் – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பெருமிதம்

மதுரை:-

கழக கூட்டணி இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வென்றது என்ற வரலாறு உருவாகும் என்று மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர், வடக்கு 3ம்பகுதி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவியுடன், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வடக்கு 2ம் பகுதி கழக துணைச்செயலாளர் ஆர்.பாஸ்கரன் தலைமை தாங்கினார். வடக்கு 2ம் பகுதி கழக செயலாளர் கே.ஜெயவேல், மத்திய 3ம் பகுதி கழக செயலாளர் பி.எஸ்.கண்ணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அரவிந்தன், மாவட்ட தகவல் தொழில் நுட்பபிரிவு செயலாளர் மாணிக்கம், வட்டக் கழக செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஒய்.ஜி.மகேந்திரன், ஜெயராஜ், தங்கப்பாண்டியன், ஒச்சாத்தேவர், கணேசன், காஜா, வெங்கடாசலம், மணிமுருகன், தேவதாஸ் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்

இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, தலைமை கழக பேச்சாளர்கள் முருகேசன், குன்னூர் சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது :-

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவி புரட்சித்தலைவி அம்மா. அதனால் தான் அவர் இல்லையென்றாலும் கூட தமிழக மக்களே அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் 2 கோடி குடும்பங்கள் உள்ளன. அதில் அனைத்து இல்லங்களிலும் அம்மா அவர்கள் திட்டங்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு டி.டி.வி.தினகரன் அம்மாவின் ஆட்சியை அகற்ற பல்வேறு சித்துவேலைகளை செய்து வருகிறார். அது எதுவும் நிறைவேறவில்லை, இதே புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்தை சட்டமன்றத்தில் முதலமைச்சர் திறந்து வைக்கும் போது அதனை தி.மு.க. எதிர்த்து நீதிமன்றம் சென்றது. ஆனாலும் சட்டமன்றத்தில் அம்மாவின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து அம்மாவிற்கு புகழ் சேர்த்தோம். ஆனால் இன்றைக்கு அம்மாவின் பெயரில் கட்சி நடத்தும் டி.டி.வி.தினகரன் அம்மாவின் பட திறப்பு விழாவிற்கு வராமல் புறக்கணித்தார். இவருக்கு அம்மாவின் பெயரை உச்சரிக்க கூட எந்த தகுதியும் இல்லை இதை நான் சொல்லவில்லை தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் சொல்கின்றனர்.

இன்றைக்கு ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் மதுரை பக்கத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் கூட்டம் நடத்தினார். அதில் கலந்து கொண்டவர்கள் யாருமே அந்த தொகுதியைச் சார்ந்தவர்கள் இல்லை. பணம் கொடுத்து ஆட்கள் வரழைக்கப்பட்டனர் ஏன்? இதை சொல்கிறேன் என்றால் நான் ஊடகங்களில் இந்த செய்தியை பார்த்த போது அதில் திருப்பரங்குன்றம் பகுதியைச் சார்ந்த மக்கள் யாரும் இல்லை. ஆக ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்றால் கூட பணம் கொடுத்து ஆட்களை திரட்ட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் ஸ்டாலின் எப்படி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவார்.

இன்றைக்கு கழகத்திற்கு வாக்குவங்கி அதிகரித்துள்ளது, ஏனென்றால் இன்றைக்கு ரூ.1000 பொங்கல் பரிசின் மூலம் கூடுதலாக 25 சதவிகிதம் வாக்கு வங்கி பெருகியுள்ளது, அதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் மக்களின் உள்ளங்களில் முதலமைச்சர் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

முதலமைச்சரின் திட்டங்களுக்கு தடைபோட ஸ்டாலின் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதையெல்லாம் ராஜதந்திரத்தால் முதலமைச்சர் முறியடித்து வருகிறார். ஏற்கனவே தி.மு.க.வில் தொண்டர்கள் பலம் இல்லை. தற்போது மக்கள் பலம் இல்லை அதனால் இனிமேல் தி.மு.க. எழுச்சி பெற முடியாது என்ற நிலையை உருவாக்கும் வண்ணம் வரும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி பெறும். அது மட்டுமல்லாது கழகம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்றது. கழக கூட்டணி இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வென்றது என்ற வரலாற்றை உருவாகும்.

என்று மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.