தற்போதைய செய்திகள்

கழக தேர்தல் அறிக்கை -2019 : காவேரி, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் ரூ.7000 கோடியில் ெசயல்படுத்தப்படும்…

சென்னை:-

காவேரி- குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் ரூ.7000 கோடியில் செயல்படுத்தப்படும் என்று கழகத்தின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்கள்

தமிழ் நாட்டின் பெரும் பகுதி, தொன்று தொட்டு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வந்துள்ளது. ஓரிரு இடங்களில் கிடைக்கின்ற உபரி நீரைக்கொண்டு வறண்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அவ்வப்போது சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றுள் மிகவும் ஆவலுடன் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த திட்டம் அத்திக்கடவு-அவினாசி திட்டம். இத்திட்டத்தை அண்மையில் தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். 1,652 கோடி ரூபாய் செலவில் நடைபெறவுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டத்தினால் மேற்கு தமிழகத்தில் சுமார் 35 லட்சம் மக்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கான மொத்தச் செலவையும் தமிழக அரசே மேற்கொண்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளுக்கு நீர்ப் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெருமழை வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்ல பின்வரும் புதிய திட்டங்களைச் செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்தி, நிதி ஆதாரத்தைப் பெற்று, விரைந்து செயல்படுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

1. நொய்யல் ஆற்றையும், மேற்கு தொடர்ச்சி மலையையும் மையமாகக் கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலையில் பருவ மழைக் காலங்களில் பெறப்படும் மழை, வெள்ள நீரை கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியப் பகுதி மற்றும் மதுக்கரை வனச் சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன்துறை, கோவைப்புதூர், போளுவாம்பட்டி வனச் சரகம், நரசீபுரம், தாளியூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைத்தும், குளம் குட்டைகளில் மழை நீரை நிரப்பியும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்.

2. காவேரி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் மோகனூர் தடுப்பணையில் இருந்து நாமக்கல் மாவட்டத்தின், மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்.

3. திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், காவேரி (கட்டளை கதவணை), அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்பு கால்வாய்த் திட்டம். இத்திட்டத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தால், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும்.

4. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் பெருமழைக் காலங்களில் பெறப்படும் வெள்ள உபரி நீரை, நீரேற்று முறை மூலம் சேலம் மாவட்ட நதிகளில் ஒன்றான சரபங்கா நதிக்கும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் கொண்டுசெல்லும் திட்டம்.

மேற்சொன்ன திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் பருவ மழை காலங்களில் பெறப்படும் உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பது தடுக்கப்பட்டு அந்த நீர் தமிழகத்தின் வறட்சியான மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்தத் திட்டங்கள் நிறைவேறும் பொழுது, வேளாண்மைக்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் 8 மாவட்ட மக்களுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.
மேற்சொன்ன திட்டங்களை விரைந்து செயல்படுத்த, மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.