தற்போதைய செய்திகள்

கழக தேர்தல் அறிக்கை -2019 : சென்னை மெட்ரோ ரயில் 2-வது திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை…

சென்னை

சென்னை மெட்ரோ ரயில் 2-வது திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாசுக் கட்டுப்பாடு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் 

அ) திருப்பூர், ஈரோடு, பள்ளிப்பாளையம், பவானி, வேலூர் மற்றும் கரூர் போன்ற பகுதிகளில் உள்ள சாயம் மற்றும் சலவைப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு கடலைச் சென்றடைய, நவீன தொழில்நுட்பம் கொண்ட உரிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

ஆ) தேசிய அளவில் தொழிற்சாலை மற்றும் வாகனப் புகையால் காற்று மண்டலம் மாசு அடைவதைத் தடுப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டுடன் உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

புலம் பெயர்ந்தோர் நலன் 

அ) வேலைவாய்ப்பிற்காக அயல்நாடுகளில் குடிபெயர்ந்த இந்தியர்களின் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், அதே சமயத்தில், வெளிநாடுகளில் வாழும் இந்திய தமிழ் மக்களின் குடியுரிமை, பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

ஆ) தமிழர்கள் அதிகமாக வாழும் அயல்நாடுகளில் தமிழர்களையே இந்தியத் தூதுவர்களாக நியமிக்க வேண்டுமென்று, மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

சிறுபான்மையினர் நலன் 

இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள மத உரிமை, மதம் சார்ந்த இதர உரிமைகளுக்கு பொது சிவில் சட்டம் எதிரானது என்பதால், அத்தகைய புதிய சட்டம் எந்த வடிவிலும் நிறைவேற்றப்படக் கூடாது என்று மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

குடிநீர் 

தமிழ் நாட்டில் கிராம குடிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க, ஏற்கனவே மத்திய அரசு வழங்கி வந்த, நிதி உதவி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களுக்கு பெரும்பாதிப்பை உருவாக்கியுள்ளது.எனவே, தமிழ் நாட்டிலுள்ள அனைத்து சிற்றூர்கள், கிராமங்கள், பெருநகரங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க, கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை உருவாக்கவும், அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் கிடைத்திடவும், தகுந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், முன்னுரிமை அடிப்படையில் தமிழ் நாட்டிற்கு “தேசிய ஊரக குடிநீர்த் திட்டத்தின் கீழ்” போதிய நிதி உதவியை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, திட்டங்களை நிறைவேற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

சாலை போக்குவரத்து 

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் தமிழகத்தில் கீழ்கண்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

* 774.28 கோடி மதிப்பீட்டிலான 112.35 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் மற்றும் பாலங்கள் வேலைகள் திட்டம்.

* 353.36 கி.மீ. நீளம் கொண்ட ஐந்து சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மேற்கொள்ளும் திட்டம்.

* தேசிய நெடுஞ்சாலை எண். 45ல் 245 கோடி ரூபாயில் 18.60 கி.மீ. நீள சாலையை எட்டு வழிச் சாலையாக மாற்றும் திட்டம்.

* தேசிய நெடுஞ்சாலை 4ல், 235 கோடி ரூபாயில் 23.9 கி.மீ. நீள சாலையை எட்டு வழிச் சாலையாக மாற்றும் திட்டம்.

* கோயம்புத்தூர் மாநகரில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம்.

தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும் மேற்கண்ட திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை வழங்கி, தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்து, விரைவாக செயல்படுத்திட மத்திய அரசை வலியுறுத்துவதுடன், இத்திட்டங்கள் நிறைவேற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

ரயில்வே 
அ) சென்னை மெட்ரோ ரயில் திட்டம் பகுதி 2-ன் கீழ் செயல்படுத்தப்படவுள்ள 118.9 கி.மீ. நீளத்திற்கான திட்டத்தை செயல்படுத்த அனுமதியும், மத்திய அரசும் தமிழக அரசும் தலா 50 சதவீதம் என்ற பங்கில் மேற்கொள்ளப்படவுள்ள, இந்த கூட்டு திட்டத்திற்கு தேவையான நிதி ரூ. 69,180 கோடியில், மத்திய அரசின் பங்கான 50 சதவிகித நிதியை உடனடியாக தமிழக அரசுக்கு வழங்குமாறு மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

ஆ) மத்திய அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கு, உதாரணமாக சென்னை-புதுச்சேரி ரயில் பாதை, திண்டிவனம்-நகரி ரயில் பாதை போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பணிகள் துவக்கப்படவில்லை. தாமதம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக புதிய ரயில் பாதைகளை அமைத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதுடன், முழு அளவில் திட்டங்களை நிறைவேற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.

இ) கிராமப்புற பகுதிகளின் ஒட்டுமொத்த உற்பத்தி வருவாயை பெருக்கம் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களையும் ரயில் போக்குவரத்து மூலம் இணைத்து, மேம்படுத்தப்பட்ட ரயில் சேவையை வழங்க வேண்டுமென்று மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

ஈ) ரெயில் போக்குவரத்து பாதைகளில், பல்வேறு இடங்களில் ஆளில்லாத ரெயில்வே வாயில்கள் உள்ளதால், போக்குவரத்தின்போது அதிக அளவில் விபத்துக்களும், உயிர்ச் சேதங்களும் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்த்திடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆளில்லா ரெயில்வே வாயில்களிலும் தானியங்கி ரெயில்வே வாயில்களை அமைக்க மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.

உ) தமிழ் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும், மக்களின் நலன் கருதி அனைத்து விரைவு ரெயில்களும் சில நிமிடங்கள் நின்று செல்லும் வகையில் உத்தரவு வழங்குமாறு மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.

நவீன விமான நிலையங்கள் 

அ) கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்து நவீனமயமாக்க வேண்டுமென மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

ஆ) சேலத்திற்கு இரவு நேர விமான சேவையை ஏற்படுத்த மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மின் ஆளுமை நிர்வாகம் 

தேசிய அளவில் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் அளவிற்கு ஆழமாக பரவியுள்ள ஊழலை ஒழிக்கும் வகையில், “நவீன தொழில்நுட்பம் நிறைந்த முழுமையான மின் ஆளுமைத் திட்டத்தை” அரசு நிர்வாகங்களின் அனைத்து மட்டத்திலும், அதாவது, கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி, ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள், வட்டங்கள், மாவட்டங்கள், அனைத்துத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் உள்பட அனைத்து மட்டங்களிலும் உரிய கட்டமைப்பை உருவாக்கி, செயல்படுத்திட வேண்டுமென மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.