தற்போதைய செய்திகள்

கழக தேர்தல் அறிக்கை -2019 : புதுச்சேரிக்கு மாநில சுயாட்சித் தகுதி…

சென்னை:-

புதுச்சேரிக்கு மாநில சுயாட்சி பெற்றுத்தர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் குழு நிரந்தர உறுப்பினராக இந்தியா ஏற்றுக்கொள்ளப்பட நடவடிக்கை

இந்திய நாடு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெறத் தேவையான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென்று, மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.

புதுச்சேரி மாநிலத்திற்கு சுயாட்சி தகுதி 

அ) புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக இருக்கும் புதுச்சேரிக்கு முழு மாநிலம் என்ற சுயாட்சித் தகுதியை வழங்குமாறு மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.

ஆ) மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி மாநிலத்திற்கு 2007-ஆம் ஆண்டு முதல் மாநில வரவு செலவுக்கென இந்திய அரசின் ஒப்புதலோடு தனிக் கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய அரசின் ஒட்டுமொத்த தொகுப்புக் கணக்கில் 2007-ம் ஆண்டுக்கு முன்பாக இருந்த 2,300 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திட வேண்டுமென இந்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்.

கேபிள் கட்டணக் குறைப்புக்கான நடவடிக்கை 

மக்களின் எதிர்பார்ப்பினை நிவர்த்தி செய்யும் வண்ணம் கேபிள் / DTH கட்டணங்களை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.