தற்போதைய செய்திகள்

கழக- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் அரசு திட்டங்கள் முழுமையாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்…

திருவண்ணாமலை:-

கழகம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் அரசு திட்டங்கள் முழுமையாக கிடைக்கும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள போளூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆரணி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியது:-

சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் கட்சிகளாக அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. செயல்படுகின்றன. நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் இந்திய நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடியது. இந்தியாவை பாதுகாப்பான நாடாக வைத்திருப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒத்த கருத்துடைய அரசாக செயல்பட்டால் மக்களுக்குத் தேவையான திட்டங்கள் அனைத்தும் கிடைக்கும். திட்டங்கள் குறித்த நேரத்தில் மக்களை சென்றடையும். தேர்தலுக்கு பிறகு தமிழகம், இந்தியாவின் வளர்ச்சியில் முதல் மாநிலமாகச் செயல்படும். பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்கள் சகோதரர்களாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை மக்கள் பாலமாக செயல்பட வேண்டும்.

பாஜக மற்றும் அஇஅதிமுக ஆகிய கட்சிகள் சிறுபான்மை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும், பாதுகாப்புக்கும் உறுதியோடு செயல்படும். சிறுபான்மையினர் குறித்து பேச திமுகவுக்கு எந்தவித தகுதியும் இல்லை. தமிழகத்தில் திமுக கூட்டணியில், 9 மக்களவை தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டுப் பெற்றுள்ளது. ஆனால் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் 100 சதவீதம் மக்களுக்கு கிடைப்பது உறுதி.

பாஜக தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் கடன்களுக்கு வட்டி கிடையாது. கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் அளிப்பது, ஜி.எஸ்.டி. வரியை எளிதாக்குவது உள்ளிட்டவைகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களும் தேர்தலுக்கு பின்னாலும் தொடரும்.

இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

கூட்டத்தில் முன்னால் எம்எல்ஏ எல்.ஜெயசுதா, தமாக பொருப்பாளர்கள் பாலி கோ.அரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் தினகரன், ஆரணி நகர தலைவர் தினேஷ், இளந்திரையன், சிம்லா மனோகரன், போளுர் கழக நகர செயலளார் பாண்டுரங்கன், மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.