தற்போதைய செய்திகள்

கழக வேட்பாளரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரம்…

தருமபுரி,

சிட்லிங் மலைப் பகுதியில் புதியதாக நீர்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அரூர் சட்டப்பேரவை தொகுதி கழக வேட்பாளர் வே.சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம், சிட்லிங் ஊராட்சியில் நடைபெற்றது.

இந்த பிரசார கூட்டத்தில் தருமபுரி மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் போதிய பருவ மழையும், நீர் வளமும் இல்லை. இதனால் இந்த மாவட்டமானது வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.அரூர் வட்டம் சிட்லிங், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி வட்டாரப் பகுதியில் அதிகமான மலைகள் உள்ளன. இந்த மலைத் தொடர்களில் பருவ மழை காலங்களில் அதிக அளவில் மழைநீர் வீணாகி கடலில் கலக்கிறது. சிட்லிங் மலைப் பகுதியில் புதியதாக நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன. எனவே, இங்குள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிட்லிங் மலைப் பகுதியில் புதியதாக நீர்த்தேக்கம் அமைவதற்கு பாடுபடுவேன்.

தருமபுரி முதல் மொரப்பூர் வரையிலும் புதியதாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை அமைந்தால், மொரப்பூர் ரயில் நிலையம் ரயில்வே பாதைகளை இணைக்கும் புதிய சந்திப்பாக உருவாகும். இதனால் மொரப்பூர் உள்ளிட்ட தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடையும். கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையிலான தார்ச் சாலை பழுதடைந்துள்ளது. இந்த சாலையானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இந்த சாலையைச் சீரமைப்பு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது தமிழக அரசு சுமார் ரூ. 3 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரையிலான தார்ச் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கும்.

கோட்டப்பட்டி, சிட்லிங், ஏ.கே தண்டா பகுதியில் குறைந்த மின் அழுத்தம் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே, விவசாயிகள், சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிட்லிங் மலைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான மின்சாரம் கிடைக்க சிட்லிங் பகுதியில் புதியதாக துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

முன்னதாக, அரூர் சட்டப் பேரவை தொகுதி கழக வேட்பாளர் வே.சம்பத்குமாரை ஆதரித்து ஏ.கே.தண்டா,சிட்லிங்,கோட்டப்பட்டி,நரிப்பள்ளி,பெரியப்பட்டி,பையர்நாய்க்கன்பட்டி,வேடகட்டமடுவு, சிக்களூர், தீர்த்தமலை, பையர்நாய்க்கன்பட்டி,வேப்பம்பட்டி, பொன்னேரி முத்தானூர் உள்ளிட்ட பகுதியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த தேர்தல் பிரசாரத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் பசுபதி, மாவட்ட கழக துணை செயலாளர் செண்பகம் சந்தோஷம், மாவட்ட பிரதிநிதி சாமிக்கண்ணு, அரூர் ஒன்றிய எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவன், மற்றும் பாமக மாநில துணைத் தலைவர் ரா.அரசாங்கம், உழவர் பேரியக்க மாவட்டச் செயலர் அய்யப்பன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.