தற்போதைய செய்திகள்

கழக வேட்பாளரை ஆதரித்து ராசிபுரத்தில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு…

நாமக்கல்:-

கழக வேட்பாளரை ஆதரித்து ராசிபுரத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் டி.எல்.எஸ். (எ) ப.காளியப்பனை ஆதரித்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் அனைத்து வியாபார சங்ககளின் நிர்வாகிகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் தீவிர வாக்குகள் சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளரும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளருமான டிஎல்எஸ் (எ) ப.காளியப்பன், நாமக்கல் மாவட்டக் கழக அவைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

வியாபாரிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத அரசு கழக அரசு தான் என உங்களுக்கு நன்றாக தெரியும். வியாபாரிகளுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் அதைக் காப்பாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம். கடந்த 8 ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்த காரணத்தினால் நாமக்கல் மாவட்டத்திற்கு எத்தனை திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்கள். நாமக்கல் மாவட்டத்திற்கு 4 தாலுகா அலுவலங்கள் கொண்டு வந்துள்ளேன். அதேபோல இரண்டு கலைக்கல்லூரிகள் கொண்டு வந்துள்ளேன்.

ஏராளமான சாலை திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நாமக்கல் நகரத்திற்கு மட்டும் 150 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்திருக்கிறோம். குமாரபாளையம் திருச்செங்கோடு தொகுதிகளில் 400 கோடி ரூபாய்க்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்து பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருச்செங்கோடு நகராட்சியில் 89 கோடி ரூபாய்க்கு புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ராசிபுரம், வெண்ணந்தூர் பகுதிகளுக்கு போதிய அளவிற்கு தண்ணீர் இல்லை. தேர்தல் முடிந்தவுடன் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்.

நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றியிருக்கிறார். புதிய ரயில் திட்டமாக இருந்தாலும் சரி மின்சார ரயிலாக இருந்தாலும் சரி மற்ற எல்லா திட்டங்களுக்கும் நமது நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றி தந்திருக்கிறார். நாங்கள் சாதனைகளை செய்து இருக்கிறோம். அந்த சாதனைகளுக்காக எங்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்குங்கள். அம்மா அவர்கள் என்ன கோட்பாடுகளை எங்களுக்கு வகுத்தார்களோ அந்த அடிப்படையில் நாங்கள் செயலாற்றி கொண்டிருக்கின்றோம். எங்களை போன்ற ஒரு சாதாரணமானவர் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறார். இது நடக்கக் கூடிய காரியமா?

கழக வேட்பாளர் டிஎல்எஸ் வயதானவர் என்று கொங்கு ஈஸ்வரன் கூறியிருக்கிறார். ஏன் வயதானவர்கள் யாரும் வரக் கூடாதா? அவர் முப்பது ஆண்டுகாலம் அரசியலில் இருந்து வருகிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வயதுக்கும், சேவைக்கும் வித்தியாசம் கிடையாது. டி.எல்.எஸ் காளியப்பன் உங்களில் ஒருவர். சாதாரண விவசாயியாக இருந்து ஒரு பெரிய தொழிலதிபராக உயர்ந்தவர். உங்கள் கஷ்டங்களை நன்கு அறிந்தவர். அவர் உங்களோடு இருந்து பணியாற்றுவார் என்று நான் உறுதி அளிக்கின்றேன்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.