தற்போதைய செய்திகள்

கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு தேனீக்கள் போல் உழைக்க வேண்டும் – நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அமைச்சர் எம்.மணிகண்டன் அறிவுரை…

ராமநாதபுரம்

கழகம் நிறுத்தும் வேட்பாளர்களின் வெற்றிக்கு தேனீக்கள் போல் உழைக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் அறிவுரை வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளியில் அவசர ஆலோசனை கூட்டம் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

மண்டபம் ஒன்றிய கழக செயலாளர் தங்க மரைக்காயர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் தர்வேஸ் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசியதாவது:-

முதல்வரும் துணை முதல்வரும் ஆட்சியையும்,கட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். அம்மாவின் வழியிலேயே பல எண்ணற்ற திட்டங்களை அடுக்கடுக்காக அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்தி வருகின்றனர். நாளுக்கொரு நலத்திட்டம் என்ற அடிப்படையில் முதல்வர் நாட்டு மக்களுக்கு செயல்படுத்தி வருகிறார்.தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் அரசாக கழக அரசு திகழ்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை ஈட்டுவதற்காகவே இந்த அவசர கூட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசிக்கவே இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளேன்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மற்ற ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மண்டபம் ஒன்றியம் பகுதியில் கழக தொண்டர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

நமக்குள் எவ்வித விருப்பு வெறுப்பின்றி கழக பணியாற்றினால்தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அம்மாவின் ஆசீர்வாதத்தால் வீறுநடை போடும் கழக அரசை யாராலும் வெற்றி காண முடியாது என்ற நம்பிக்கையை எனக்கு தர வேண்டும். அதேபோல் பரமக்குடி இடைத்தேர்தலிலும் கழகம் நிறுத்தும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் கழகத் தொண்டர்கள் அனைவரும் தேனீக்கள் போல் செயல்பட வேண்டும். மக்களுக்கு செய்யும் அனைத்து நலத்திட்டங்களை போல் கழகத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கும் தேவையான உதவிகளை நிச்சயம் நான் செய்து தருவேன்.

வெற்றி என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கழக கொடிகளை ஏற்றவேண்டும், பழைய கொடிகளை புதுப்பிக்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கழக அரசு வழங்கும் இரண்டாயிரம் ரூபாய் கிடைக்க உதவ வேண்டும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில், தொண்டர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும் போது இருந்த சேவையை வி,ட தற்போது உங்கள் சேவை பன்மடங்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.