தற்போதைய செய்திகள்

கழக வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்…

திருப்பூர்:-

எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரம் பொள்ளாச்சியில் எடுபடாது. கழக வேட்பாளரின் வெற்றி உறுதி என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து கழக அமைப்பு செயலாளரும், கால்நடை பராமரிப்புதுறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடுமலைப்பேட்டை நகரத்திற்குட்பட்ட யு.கே.பி.நகர் சாதிக் நகர் வி.ஜி.ராவ் நகர் வேல்முருகன் நகர் கண்ணப்பன் நகர் பொள்ளாச்சி ரோடு பழைய அக்ரகாரம் ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்குசேகரிப்பின் போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சிறுபான்மையினரின் பாதுகாவலனாக விளங்குகிறது.

சிறுபான்மையின மக்கள் மீது புரட்சித்தலைவி அம்மா கொண்டிருந்த அக்கறை, பேரன்பு ஆகியவற்றை சிறிதளவும் குறையாமல் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையிலான கழக அரசு அரணாக செயல்பட்டு ஹஜ் புனிதப்பயணம் செல்ல மானியம் ரூ.6 கோடி வழங்கியும், எண்ணற்ற நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கிய கழக அரசு, தேர்தல் அறிக்கையின்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கிடுவோம். 17 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடத்திய காங்கிரஸ், திமுகவினர் தமிழகத்திற்கு என்ன திட்டங்கள் கொண்டு வந்தனர். பதவிகளை அனுபவித்து விட்டு தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் துரோகம் மட்டுமே செய்தவர்கள் தான் இவர்கள்.

நமது கழக வேட்பாளர் சி.மகேந்திரன் 2014-ம் ஆண்டு தேர்தலில் தந்த வாக்குறுதிகளை முழுவதும் நிறைவேற்றியவர். பொள்ளாச்சி திண்டுக்கல் சாலை உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புறவழிச்சாலை, சாலைகளை அகலப்படுத்துதல், மையத்தடுப்பான். பாலங்கள் விரிவாக்கம், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், நடைபாதை ரவுண்டானா, உயர்மட்ட பாலம் என எண்ணற்ற பணிகளை செயல்படுத்தியுள்ளார்.

கொப்பரை தேங்காய்க்கு விலை உயர்வு, கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 5 ஏக்கர் நிலம் என எண்ணற்ற சாதனைகளை செய்து வருகிறார். இத்தொகுதியில் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. எதிர்க்கட்சிகளின் ெபாய் பிரச்சாரம் பொள்ளாச்சியில் என்றுமே எடுபடாது. பொள்ளாச்சி தொகுதி கழகத்தின் கோட்டை கழக வேட்பாளர் சி.மகேந்திரன் பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்அணி செயலாளர் ஏ.ஹக்கீம், வார்டு செயலாளர் பி.ஏ.பொன்ராஜ், பாலநாகமாணிக்கம், யு.கே.பி.ராதாகிருஷ்ணன், மணிவிலாஸ், பொன்ராஜ், ஹரி, மளிகை செல்வராஜ், வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணியன், பாலமுரளி, வளையாபதி, துளசிமணி, வனிதமணி, ஆறுமுகம், வெள்ளிங்கிரி, கார்த்திபன், குப்புசாமி, மணிவண்ணன், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.