தற்போதைய செய்திகள்

கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி

வேலூர்:-

வேலூர் மக்களவை தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இதில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வேலூர் மக்களவை தொகுதியில் கழகத்தின் சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கழக வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாதனூர் ஒன்றியம் சின்னச்சேரி அகரம் சேரியில் இப்பேரணி தொடங்கியது. கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் பலர் தொடங்கி வைத்தனர்.

முன்னதாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு கழக துணை ஒருங்கிணைப்பாளர்கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் சுமார் ஆயிக்கணக்கான கழகத்தினர் கலந்து கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தனர். புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் ஓங்குக, கழகத்திற்கே வாக்களிப்பீர், இரட்டை இலை சின்னம் மக்கள் சின்னம் என்று கோஷமிட்டவாறே அவர்கள் பேரணியாக சென்றனர்.வழிநெடுக அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மோட்டார் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது:- 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்நிலை மறந்து அனைவரையும் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். கருணாநிதி ஒரு தீயசக்தி, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் அவரைப் போலவே கழக தலைவர்களைப் பற்றி தரம் தாழ்ந்த வார்த்தைகளால்
பேசி வருகின்றார். ஆகவே இவர்கள் இருவரும் தரமான தலைவர்கள் கிடையாது.

காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் வேலூர் மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மாவால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது,
ஆனால் ஸ்டாலின் திமுக ஆட்சியில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது என்று பொய் கூறுகிறார்.கடந்த தேர்தலை போல் இந்த தேர்தலிலும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற பார்க்கிறார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது மக்கள் விழிப்புணர்வோடு உள்ளனர். மக்கள் அவர்களின் தவறை உணர்ந்து விட்டனர்.

இவர் எந்த வாக்குறுதி வழங்கினாலும் அது செய்ய முடியாது ஏனென்றால் மத்தியில் கூட்டணி ஆட்சியும், மாநிலத்தில் கழக ஆட்சி நடைபெறுகிறது. நம்முடைய அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நினைத்தால்தான் அனைத்து திட்டங்களையும் இந்த தொகுதியில் சிறப்பாக செயல்படுத்த முடியும். ஸ்டாலின் என்ன வாக்குறுதி வழங்கினாலும் அது கண்டிப்பாக நிறைவேற்ற முடியாது. ஆகவே வருகின்ற தேர்தலில் கழகத் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருந்து அயராது பாடுபட்டு கழக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென்று.

இவ்வாறு கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுல்லான் (எ) செல்வம், ஒன்றிய கழக செயலாளர் ஜெ.ஜோதி ராமலிங்க ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் முருகன் வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஓ.கே.சந்திரன், ஒன்றியக் கழக துணைச் செயலாளர் சின்ன சேரி சீனிவாசன் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.