தற்போதைய செய்திகள்

கழக வேட்பாளர் வெற்றி பெற்றால் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

விழுப்புரம்:-

கழக வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் திட்டங்கள் விரைவாக கிடைக்கும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முண்டியம்பாக்கத்தில் கழகம் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த இடைத்தேர்தலில் அஇஅதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளதால் திமுகவால் வெற்றி பெற முடியாது. இரும்பு மங்கையான முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பிறகு ஆட்சி கலையும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சாமர்த்தியத்தால் கழக ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சி என்றால் குடும்ப ஆட்சி. அஇஅதிமுக ஆட்சி என்றால் கூட்டாட்சி. தமிழகத்தில் நேர்மையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியான திமுக ஆளும் கட்சி கொண்டு வரும் திட்டங்களை எதிர்ப்பதை மட்டுமே செய்கிறது. குறை கூறுகிறது. திமுக எதிர்க்கட்சியாக பொறுப்புடன் செயல்படாததன் காரணமாக எதிரிகட்சியாக மாறி விட்டது.

அஇஅதிமுக அரசு மத்திய அரசுடன் ஒத்தக் கருத்துடன் இருப்பதால், தமிழகத்துக்கு அனைத்து மத்திய அரசின் திட்டங்களும் விரைவாக கிடைக்கிறது. அதேபோல, ஒத்தக்கருத்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தால் அந்த தொகுதிக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விரைவாக கிடைக்கும். ஆகவே, இத்தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர் பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

இந்த கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன், மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் தசரதன், பா.ம.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட கழக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.