தற்போதைய செய்திகள்

காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ஊழல்வாதிகள் மீண்டும் போட்டி – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் தாக்கு…

ராமநாதபுரம்:-

காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ஊழல்வாதிகளே மீண்டும் போட்டியிடுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்க பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் ஒளி மயமான ஆட்சி மோடி தலைமையில் அமையும். கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் மகத்தான கூட்டணி அமைந்துள்ளது. கடந்த 55 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீனவர் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் நலன் காக்க தனி துறை மற்றும் ரூ 10 ஆயிரம் கோடி அளவிற்கு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூக்கையூர், பூம்புகார் பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு வழங்குவது போல், மீனவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். ஒன்றில் கூட திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாது. பாஜக., கழகக் கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டது. விவேகானந்தரை போன்று மோடியும் இரும்பு மனிதர். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு திமுக., காங்., கூட்டணி சார்பில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஊழல் கூட்டணி.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசினார்.

இக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, கூட்டணி கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜநாயகம், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் குப்பு ராமு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், தே.மு.தி.க. மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.