இந்தியா மற்றவை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய்-பித்தலாட்டம்: பிரதமர் மோடி கடும் தாக்கு…

பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பாசிகாட்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நேர்மையானதாக இல்லை. முழுவதும் பொய்கள் நிறைந்துள்ளது. சொல்லப்போனால் இது தேர்தல் அறிக்கையே இல்லை. ஒட்டுமொத்தமான போலி ஆவணம். இந்த தேர்தலில் காங்கிரசில் வெற்றி பெற கடுகளவும் வாய்ப்பு இல்லை என்பதால் தவறான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். இதனால் தான் பொய் பித்தலாட்டம் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஓட்டுக்காக அப்பாவி விவசாயிகளை ஏமாற்ற முயற்சித்து இருக்கிறார்கள். நாங்கள் ஒரு போதும் இது போன்று விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது இல்லை. விவசாயிகளுக்காக சிறந்த திட்டங்களை உருவாக்கினோம்.இப்போது நடப்பது நம்பிக்கைக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் தேர்தல். காங்கிரஸ் சதி திட்டத்துடன் தேர்தலை சந்திக்கிறது.

நாங்கள் ஒரு பக்கம் காவலாளியாக நின்று நாட்டை பாதுகாக்கிறோம். மறு பக்கம் அதிகார பசியோடு தேர்தலில் நிற்கிறார்கள். காங்கிரஸ் சமூக விரோதிகளுக்கு ஆதரவான இயக்கமாக உள்ளது, நாட்டில் தீயவர்களை ஒடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டத்தையே காங்கிரஸ் சீர்குலைக்க பார்க்கிறது.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வட கிழக்கு மாநிலங்களை புறக்கணித்தார்கள். இந்த பகுதியே நாட்டில் இருந்து விலகிய இடமாக இருந்தது. நாங்கள் இதை இணைப்பு பாலமாக மாற்றி உள்ளோம்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.