தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தி.மு.க பாராட்டுவது வேடிக்கை – டாக்டர் ராமதாஸ் பேச்சு…

சேலம்:-

அ.தி.மு.க.வை நம்பி வாக்களித்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்று அரசு ஊழியர்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளர் சுதீசை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். பா.ம.க. அமைப்பு செயலாளர்கள் அருள் குணசேகரன், மாவட்ட செயலாளர் நடராஜ், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பிரச்சார கூட்டத்தில் தே.மு.தி.க வேட்பாளர் சுதீஷ் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுதீஷ் வெற்றி நிச்சயிக்கப்பட்டது. ஆனால் வெற்றிபெற கூடாத தி.மு.க. வேட்பாளர் இங்கே நிற்கிறார். இந்த தேர்தலோடு திமுக தொலைந்தது என அனைத்துப் பகுதிகளிலும் கூறி வருகிறேன். திமுக முடிவுக்கு வரப்போகிறது. முதலமைச்சரை பற்றி தாறுமாறாக பேசுவது தான் திமுகவின் வேலை. அதனை ஸ்டாலின் வழக்கமாக வைத்துள்ளார். என்னைப்பற்றி அவ்வளவு கேவலமாக பேசி உள்ளார். வன்னியர்களுக்கு ராமதாஸ் என்ன செய்தார் என கேள்வி கேட்கும் ஸ்டாலின் இந்த கேள்வியை அவரது தந்தையிடம் கேட்டிருக்கலாம். அவருக்கு அனைத்துமே தெரியும்.

அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி வைத்தது எங்கள் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. தி.மு.க.வினர் மாலை போட்டு கழுத்தை அறுப்பவர்கள். ஆனால் அ.தி.மு.க தொண்டர்கள் கைகோர்த்து வேலை செய்வார்கள். உயிரை கொடுத்து வேலை செய்வார்கள். யாராக இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியினர் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை சுதீசிடம் கேளுங்கள்.

நான் ஒரு விவசாயி, தமிழக முதல்வரும் விவசாயி. நான் தைலாபுரத்தில் விவசாயம் செய்து வருகிறேன். அரசியல் செய்து வருகிறேன். .முதலமைச்சர் அவரும் விவசாயம் செய்கிறார். விவசாயத்தை அவருடைய துணைவி கவனித்து வருகிறார். அடிப்படையிலே நாங்கள் விவசாயிகள். விவசாயிகளின் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும். அவர்களின் கஷ்டங்களை போக்க ஒவ்வொன்றாக நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லை. 6 ஆயிரம் தருவோம் என்பது கொடுக்க முடியாது. அது சாத்தியம் என தி.மு.க.வினர் கூறுகிறார்கள். வேலிக்கு ஓணான் சாட்சி போல தி.மு.க.வினர் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. என அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுதீசை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.