இந்தியா மற்றவை

காணாமல் போன விமானப்படை விமானம் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு…

மாயாமான ஏஎன்32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டறியப்பட்டிருப்பதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. அது கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இந்த தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு உள்ளன. இதைப்போல ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், விமானத்தை தேடும் பணி 9-வது நாளாக இன்றும் நடைபெற்றது. அப்போது சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே சிதைந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டரின் உதவியுடன் விமானப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏ.என்.32 ரக விமானம் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.