பெரம்பலூர்

காரில் கடத்திய ரூ.2 கோடி பறிமுதல் -விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 4 பேர் கைது…

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சியிலிருந்து ரூ.5 கோடி ரொக்கப்பணம் கட்டு கட்டாக காரில் பதுக்கி கொண்டு செல்வதாக திருச்சி ஐஜி அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின் பேரில் பெரம்பலூர் ஏ.டி.எஸ்.பி. ரெங்கராஜன், டி.எஸ்.பி.க்கள் ரவீந்திரன், தேவராஜ், இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பிருதிவிராஜ் உள்ளிட்ட போலீசார் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த ஆலத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் அந்தோணிசாமி ஆகியோர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று  இரவு பெரம்பலூர் அரியலூர் இடையே உள்ள பேரளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டாடா சபாரி கார் ஒன்று வந்தது. காரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி பிரபாகரன் உள்பட 4 பேர் இருந்தனர். அந்த காரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பணம் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் காரில் பணம் இருக்கிறது என்று மீண்டும் உறுதியாக தகவல் போலீசுக்கு சொல்லப்பட்டது. இதை அடுத்து அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வைத்து மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, குன்னம் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் காரில் சோதனை செய்யப்பட்டது.சந்தேகத்தின் பேரில், கதவு ஒன்றின் பாகங்களை கழற்றி ஆராய்ந்த போது 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கட்டுக் கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து கதவுகளின் பாகங்களையும் கழற்றி சோதனையிட்ட போலீசார், 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்திற்கு எந்த ஆவணங்களும் இல்லை. வருமான வரி உதவி ஆணையரிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக காரில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் தங்கதுரை, மாநில நிர்வாகி பிரபாகரன், அவரது ஆதரவாளர்கள் 2பேர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இந்தப்பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.