தற்போதைய செய்திகள்

காலதாமதமாக பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை – புதுச்சேரி அரசுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்…

புதுச்சேரி:-

காலதாமதமாக பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு கழக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி கழக சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மக்கள் நலனில் அக்கறையின்றி மலிவு விளம்பரத்தில் நாட்டம் செலுத்தி வருகிறார். அமைச்சரவை கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பே ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் எங்கள் ஆட்சியில் மாநில வளர்ச்சி இல்லை, அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை, வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை என்று எதையும் செய்யவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இதே ஒப்புதல் வாக்குமூலத்தையே தருவார். முதல்வருக்கு போராட்டம் நடத்த உரிமையுள்ளது என்று கூறுகின்றார். ஆனால் சம்பளம் கொடுக்காததால் சாப்பாட்டிற்கு வழியில்லாத பாசிக், பாப்ஸ்கோ, ரோடியர் மில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்.

மாநில வருவாயை பெருக்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பல முறை, பல திட்டங்களை கூறியுள்ளோம். ஆனால் அதை எதையும் காதில் வாங்குவது இல்லை. உதாரணமாக கலால்துறையில் மட்டும் அரசே கார்ப்ரேஷன் அமைத்து 7 தனியார் மதுபான உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்வது, இந்த சில்லறை விற்பனை நிலையங்களையும் ஆண்டுதோறும் கள் மற்றும் சாராய கடைகளுக்கு ஏலம் விடுவதைப்போல் ஏலம் விடுவது ஆகியவைகளை செய்தாலே ஆண்டிற்கு ரூ.500 கோடி அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும். அரசின் கஜானாவிற்கு வரவேண்டிய வருவாயை குறுக்கு வழியில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பாக்கெட்களுக்கு செல்கின்றது.

பிப்டிக், டிஸ்லரி, பவர் கார்ப்ரேஷன் போன்ற லாபகரமாக இயங்கக்கூடிய அரசு நிறுவனங்களின் தலைவர் பதவியை வேண்டப்பட்ட கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.சட்டசபையில் உள்ள அமைச்சர் அறைகளில் 50 பேர் வரை வீண் அரட்டை அடிக்கின்றனர். மூன்றுநாள் தாமதமாக வருபவர்களுக்கு அரை நாள் சிஎல் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். அதன்பின்னரும் தொடர்ந்தால் மெமோ அனுப்ப வேண்டும்.

ஆனால் இவை எதையும் செய்வது இல்லை. அரசு ஊழியர்கள் களப்பணிக்கு சென்றால் லாக் புத்தகத்தில் குறிப்பு எழுதி வைக்க வேண்டும். ஆனால் இதை செய்வதும் இல்லை. 35 முதல் 45 சதவீதம் வரையிலான அரசு ஊழியர்கள் மக்கள் பணியை செய்யாமல் அவர்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து வருகின்றனர். அரசு ஊழியர்களிடத்தில் ஒழுங்கீணம் இருப்பதற்கு ஆட்சியாளர்களின் கையாலாகாத தனம்தான் காரணம். 10 பேர் மீது நடவடிக்கை எடுத்தால் அனைவரும் திருந்தி சரியாக வந்து, பணியை செய்வார்கள்.

அவர்கள் பல கோடி ரூபாயை வீண் விரயம் செய்து வருகின்றனர். அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்தினாலேயே ஆண்டிற்கு ரூ.750 கோடி கூடுதல் வருவாயும், ரூ.250 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும். மின் கட்டணத்தை உயர்த்தியவுடன் எதிர்ப்பு தெரிவித்தோம். உடனே முதல்வர் குறைப்பதாக உறுதியளித்தார். முதல்வர் தலைமை செயலகத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். கடந்த ஆண்டு இதுபோல் முதல்வரும், அமைச்சர்களும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தனர்? அரசு ஊழியர்கள் 8.45க்கு பணிக்கு வரவேண்டும். ஆனால் 10 மணிவரை 30 சதவீதம் பேர் வருவது இல்லை. பலர் பயோமெட்ரிக்கில் தங்களது கைரேகையை பதிவு செய்துவிட்டு வெளியே கிளம்பிச் சென்று விடுகின்றனர். அலுவலக நேரத்தில் தனியார் பள்ளிகள் முன்பு தங்கள் பிள்ளைகளுக்காக காத்திருப்பதும், உணவு ஊட்டுவதுமாக உள்ளனர்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததற்கான காலக்கெடு முடிய உள்ளது. அரும்பார்த்தபுரம் பாலத்தை கட்டி முடிக்காததால் இழப்பீடு தொகையை அதிகளவு தற்போது தர உள்ளனர். ரூ.130 கோடிக்கு சுற்றுலா திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதல்வர் சுற்றுலா மேம்பாட்டுப்பணி நடைபெறவில்லை என்று கூறுகின்றார். முதல்வரும், ஆளுனரும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சரவை முடிவை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று இருப்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.