சிறப்பு செய்திகள்

கால்நடைகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் சேவை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக அம்மா ஆம்புலன்ஸ் வாகன சேவை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 7 ஓட்டுநர்களுக்கு அம்மா ஆம்புலன்ஸ்களுக்கான சாவிகளை வழங்கி வாழ்த்தினார். ரூ.40 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கான புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இது குறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், பால் பண்ணைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு ஆதாயமான விலை கிடைக்கச் செய்தல், நுகர்வோருக்கு தரமான பாலினை நியாயமான விலையில் விற்பனை செய்தல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பால்வளத்துறை மூலமாக பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தில் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைப் பதிவாளர் (பால் வளம்) அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இப்புதிய அலுவலகம் திறக்கப்பட்டதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 175 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த சுமார் 3233 உறுப்பினர்கள் மற்றும் 283 பணியாளர்கள் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய சேவைகள் தொடர்பாக ஒரே இடத்தில் தீர்வு காண இயலும்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 17.7.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பால் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றியங்கள் மூலமாக உரிய நேரத்தில் சேவை வழங்கவும், நுகர்வோர்களுக்கு அவர்களது இல்லங்களுக்கு அருகிலேயே, தரமான ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள், தங்கு தடையின்றி உடனுக்குடன் கிடைக்கவும் ஏதுவாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து கரூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும், தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தருமபுரியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும்,

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தேனியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும் விழுப்புரம்-கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து கடலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், 15.8.2019 அன்று முதலமைச்சரின் சுதந்திர தின விழா உரையில், வேலூரில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகிய 6 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கான அலுவலகங்கள், சுற்றுலா தலமான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆவின் பால் உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகம்,

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கடலூர் மாவட்டம் – குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி ஆகிய இடங்களில் 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை அறை, ஆய்வக அறை, சிகிச்சைக்கூடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இரண்டு கால்நடை மருத்துவமனைக் கட்டடங்கள், மீன்வளத்துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், குறும்பனை கிராமத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டம், பள்ளம்துறை கிராமத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம்,

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சின்னங்குடி கிராமத்தில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் மற்றும் நாகப்பட்டினம் வட்டம், ஆரியநாட்டுத்தெரு கிராமத்தில் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், சூலேரிக்காட்டுகுப்பம் கிராமத்தில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கடலரிப்பு தடுப்புச் சுவர் மற்றும் மீன் இறங்குதளம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பெரியமாங்கோடு கிராமத்தில் 4 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம்,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகரில் உள்ள பழைய மீன் பண்ணையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சினை மீன்குளம், நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 5 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நூலகத் தொகுதிக் கட்டடம் என மொத்தம் 40 கோடியே 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கால்நடை நிலையங்களில் அனைத்து சிகிச்சைப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சில சமயங்களில் உயிர்காக்கும் அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நேர்வுகளிலும், நடக்க இயலாத மற்றும் கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற இயலாத நேர்வுகளிலும், கால்நடை வளர்ப்போரின் நோயுற்ற கால்நடைகளில் இறப்பு ஏற்பட்டு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்.

எனவே, இதை தடுத்திடும் பொருட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016-ம் ஆண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் பரிட்சார்த்த முறையில் காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு தலா 2 ஊர்திகள் வீதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விவசாயிகளிடையே இச்சேவை நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்ட 22 கால்நடை அவசர மருத்துவ ஊர்தியான “அம்மா ஆம்புலன்ஸ்” வாகனங்களின் சேவையை துவக்கி வைக்கும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று 7 ஓட்டுநர்களுக்கு அம்மா ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

இந்த அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தில், கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை வைக்கப் பட்டுள்ளன. சிறிய கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு மடங்கக் கூடிய பரிசோதனை மேஜை Adjustable Table அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் செல்ல இயலாத இடங்களில் உள்ள நடக்க இயலாத கால்நடைகளை அவசர ஊர்திக்கு எடுத்து வருவதற்கு ஏதுவாக அகற்றி பொருத்தக்கூடிய தள்ளுவண்டி (Trolly) வசதி செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிட ஏதுவாக ஒரு டன் எடை கொண்ட கால்நடையையும் தாங்கக்கூடிய வகையில் சக்திவாய்ந்த Hydraulic தூக்கி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், மின் இணைப்பு தங்கு தடையின்றி கிடைத்திட இன்வர்டர் மற்றும் இரவில் மின்சார வசதியில்லாத இடத்தில் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வாகனத்தின் வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய பெரிய ஒளிவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி கால்நடை பராமரிப்பு துறைப்பணிகள் மற்றும் திட்டங்கள் பற்றி விரிவாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் தொலைக்காட்சி ஒன்று வாகனத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தின் பக்கவாட்டு வெளிப்புறத்தில் துறைப்பணிகளை விளக்கும் ஒளிரும் மின்பலகைகள் (Glow Sign Boards) பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் அம்மா ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சை ஊர்தி இயக்கப்படும். இந்த சேவை “1962” என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் விவசாயிகள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பால் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஏ.ஞானசேகரன், மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் கீ.சு.சமீரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.