தற்போதைய செய்திகள்

காவல்துறை நவீனமயமாக்கல் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.8084.80 கோடி…

சென்னை:-

மாநிலக் காவல் துறை திறம்பட செயல்படத் தேவையான பணியாளர்களையும், நவீன உபகரணங்களையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. கட்டடங்கள், உபகரணங்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 2016-2017-ம் ஆண்டு முதல் 904.23 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. திறன்மிகு காவல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த மாநில கட்டுப்பாட்டு அறையை இந்த அரசு தோற்றுவித்துள்ளது.

முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியதன் மூலம் குற்றங்கள் நடைபெறுவது கட்டுப்படுத்தப் படுவதும், குற்றவாளிகள் துரிதமாகப் பிடிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 2018 2019-ம் ஆண்டில் 6,428 பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளது. இவ்வாரியம், 2019-2020 ஆம் ஆண்டில் மேலும் 9,975 நபர்களை காலியான பணியிடங்களுக்குத் தேர்வு செய்ய உள்ளது.

‘காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்’ கீழ் மின் ஆளுமை பணிகள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 126.68 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் கணினி இணைப்புத் திட்டத்தாலும்’, பொதுச்சேவை மையங்கள் மற்றும் குறுஞ்செயலிகள் மூலம் மக்களுக்கான சேவைகளை வழங்குவதாலும் குற்றங்களைக் கண்டறியும் திறனும், மக்களுடன் காவல் துறையினரின் தொடர்பும் மேம்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ‘காவல் துறை நவீனமயமாக்கல்’ திட்டத்திற்காக 111.57 கோடி ரூபாய் உட்பட காவல் துறைக்கு 8,084.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்

நவீன கருவிகளை தொடர்ந்து வழங்கி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை இந்த அரசு நவீனப்படுத்தி வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டில் மட்டும், 3.73 கோடி ரூபாய் செலவில் ஐந்து தீயணைப்பு நிலையக் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 2019 2020-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 403.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள்

சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 2018-2019-ம் ஆண்டில் சிறைச்சாலைகளில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக 40.13 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சிறைச்சாலைகள் துறைக்காக 319.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதி நிர்வாகம்

சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-2019 ஆம் ஆண்டில் இந்த அரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 2018-2019-ம் ஆண்டில் இந்த அரசு 101.89 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. 2019 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நீதி நிர்வாகத்திற்காக 1,265.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.