தமிழகம்

காவல்நிலைய கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்…

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் திருப்பூர் மாநகரத்தில் 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 34 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருப்பூர் மாவட்டம் – மங்கலத்தில் 69 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், 11 கோடியே 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள், 5 காவல் நிலையங்கள், ஒரு காவல் துறை கட்டடம், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ், சிவகங்கையில் 44 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 201 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாநகரத்தில் 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 34 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருப்பூர் மாவட்டம் – மங்கலத்தில் 69 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் – அம்மையநாயக்கனூரில் 3 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள்; அரியலூர் மாவட்டம் – ஜெயங்கொண்டம், சென்னை மாநகர் – திருநின்றவூர் மற்றும் பல்லாவரம், மதுரை மாநகர் – ஜெய்ஹிந்த்புரம், விழுப்புரம் மாவட்டம் – கள்ளக்குறிச்சி (போக்குவரத்து காவல் நிலையம்) ஆகிய இடங்களில், மொத்தம் 5 கோடியே 4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் நிலையக் கட்டடங்கள்;மதுரை மாநகரில் 1 கோடியே 63 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை சரக குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம்;வேலூர் மாவட்டம் – ஆம்பூரில் 96 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம்;என மொத்தம், 16 கோடியே 6 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

“உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ், சீருடை பணியாளர்களுக்காக சிவகங்கை வட்டம், பையூர்பிள்ளைவயல் கிராமத்தில் 44 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 201 வீடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.