தமிழகம்

காவேரி- கோதாவரி ஆறுகள் இணைப்புதான் கழக எம்.பி.க்களின் முதல் குரலாக ஒலிக்கும் – முதலமைச்சர் உறுதி…

திருப்பூர்:-

நீர்மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எங்கெல்லாம் ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட முடியுமோ அங்கெல்லாம் ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும், காவேரியில் 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 17-வது மக்களவை கூடியதும் கழக உறுப்பினர்களின் முதல் குரலே கோதாவரி- காவேரியை இணைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமனும் உடன் சென்றார்.

சி.மகேந்திரனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

இப்போது நடக்கின்ற தேர்தல் நாடாளுமன்றத்துக்கான தேர்தல். அதனையொட்டி தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். ஆனால் தி.மு.க. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதாகவும், அதில் அவர்கள் ஆட்சியை பிடிக்கப் போவதாகவும் கற்பனை செய்து கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பெரும்பாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பதாகத்தான் அறிவிப்புகள் உள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது.  தி.மு.க.வினரும், அக்கட்சியின் தலைவரும் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த பொய் வலையில் மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

தமிழகத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் எங்கெல்லாம் தடுப்பணைகள் கட்ட முடியுமோ? அங்கெல்லாம் வரும் ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. அது மட்டுமல்ல கோதாவரி, காவேரி இணைப்பு நிச்சயம் நடந்தே தீரும். கழக வேட்பாளர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு சென்றவுடன் முதல் கூட்டத்தொடரிலேயே கழக உறுப்பினர்களின் முதல் குரல் இதுவாகத்தான் ஒலிக்கும் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.