தமிழகம்

காவேரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம் – முதலமைச்சர் உறுதி…

திருவண்ணாமலை:-

காவேரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றியே தீருவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வந்தார்கள். தொடர்ந்து அம்மா வழியில் நடைபெறும் அரசும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தைத் திருநாளாம் தைப்பொங்கலை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரூ.1000 வழங்கக் கூடாது என தி.மு.க. கெட்ட எண்ணத்துடன் நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் நீதிமன்றம் ரூ.1000 வழங்க தடையில்லை என அறிவித்ததன் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என நான் அறிவித்தேன். ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் தெரிவித்து, தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது போன்ற ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகிற எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்துவதுதான் தி.மு.கவின் வாடிக்கையாகும். அதேபோன்று பாரத பிரதமர் அவர்கள் சிறு, குறு விவசாயிகளின் நலன் கருதி ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை அறிவித்து நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 என விவசாயிகளுக்கு அந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது, அதற்குப் பிறகு 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, பல்வேறு புதிய மின் திட்டங்களை அறிவித்து, மின் தட்டுப்பாட்டை அறவே அகற்றியதன் மூலம் தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்ததற்கான விருதும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கிக்கொண்டிருக்கும் அரசு, அம்மாவின் அரசு.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை எனக் கூறி வருகிறார். தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில், ஆரணி நாடாளுமன்ற பகுதிக்குட்பட்ட வந்தவாசியில் நடைபெற்ற ஒரு சிலப்பணிகளை மட்டும் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக ரூ.20 கோடி மதிப்பில் சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்மணி கிராமத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் வந்தவாசி பகுதியில் உள்ள 6 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. வந்தவாசி நகராட்சிப் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மருந்தீஸ்வரர் கோவில் படிக்கட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 3200க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஓய்வு பெற்ற 4 தலைமைப் பொறியாளர்கள் மூலம், தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து, எந்த எந்தப் பகுதியில் தடுப்பணைகள் கட்ட முடியும் என்பதை ஆராய்ந்து அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தடுப்பணைகள் கட்டப்படும்.

விவசாயிகளின் நலன் கருதி அரசுக்கு எவ்வளவு செலவினம் ஏற்பட்டாலும், நீர் மேலாண்மைத்திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். மத்திய காங்கிரஸ் மந்திரிசபையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, தமிழ்நாட்டு நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி உதவி அளித்தது கிடையாது. இதையெல்லாம் வாக்காளாப் பெருமக்களாகிய நீங்கள் மறந்து விடக்கூடாது.

தி.மு.க. எப்பொழுது தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும், நிறைவேற்ற முடியாத, செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளை அளிப்பதே வழக்கம். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், நிலம் இல்லாத விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதை எத்தனை பேருக்கு வழங்கியிருக்கிறார்கள். அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஸ்டாலின் தோல்வி பயத்தின் காரணமாக எதைப் பேசுவது என்று தெரியாமல், தன்னை மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

தி.மு.க ஆட்சியின் போது அராஜகமும், அதிகார துஷ்பிரயோகமும் தான் இருக்கும். தற்போது பிரியாணி கடை, அழகு நிலையங்கள், செல்போன் கடை போன்ற இடங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது போன்ற எண்ணற்ற மக்கள் விரோத செயல்களில் தி.மு.க. ஈடுபட்டுவருகிறது. அவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போதே இப்படி என்றால், அவர்கள் ஆளும்கட்சியாக வந்தால் எப்படி இருப்பார்கள் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

நான் உழைப்பால் உயர்ந்தவன், சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். இது மண்வெட்டி பிடித்த கை. அதனால் ஏழை, எளிய விவசாய தொழிலாளர்களின் கஷ்ட, நஷ்டங்கள் எனக்கு நன்றாகத்தெரியும். நான் இப்போதும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் எங்களுக்கு அரசியல் பாடம் கற்றுத்தந்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே தான் இந்த அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தைச் சார்ந்தே செயல்படுத்தப்படுகிறது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் போது, அ.இ.அ.தி.மு.க. மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருப்பதாக சொல்லி வருகிறார். அவர் இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும் இங்கு மக்கள் கூட்டம் கடல் போல் காட்சி அளிக்கிறது. அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி, மக்கள் நலன் சார்ந்த கூட்டணி, ஒருமித்த கருத்துடைய கூட்டணி, இந்தக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தால் நாளுக்குநாள் பெருகிவரும் மக்களின் ஆதரவைப் பார்த்து ஸ்டாலின் பயந்து போய் இருக்கிறார் என்பது தான் எதார்த்தமான உண்மை.

அ.இ.அ.தி.மு.க. அளித்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி காவிரி – கோதாவரி இணைப்புத்திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்கள் நலன் கருதி 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக மாற்றி அமைக்கப்படும். இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட அனைவரும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆரணி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலை அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.