தற்போதைய செய்திகள்

காவேரி- கோதாவரி நதிகளை இணைக்க கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாரீர் – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…

கரூர்:-

காவேரி- கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கழக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாரீர் என்று வாக்காளப் பெருமக்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பா.ம.க சார்பில் அரவக்குறிச்சி காவல்நிலையம் அருகில் மற்றும் கந்தம்பாளையம் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி, கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கரூர் மாவட்ட கழகச் செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர்தான் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால் கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் வெற்றி உறுதியாகிவிட்டது. இதேபோல், கழக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருவதால் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியும் எங்களுக்கு உறுதியாகிவிட்டது. தாதம்பாளையம் ஏரியை தூர்வாருவது, முருங்கை தொழிற்சாலை மற்றும் கிட்டங்கி அமைப்பது, நொய்யல், அமராவதி, குடகனாற்றில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர்த்துவது போன்றவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேலாயுதம்பாளையம் அருகே காவேரி ஆற்றில் கதவணை கட்ட முதலமைச்சரே திட்டம் அறிவித்திருக்கிறார். இதே திட்டத்தை ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஸ்டாலின் சொல்வதற்கும் முதலமைச்சர் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இதில் அரசு சார்பில் சொல்வதுதான் நிறைவேறும். அதுதான் யதார்த்தம். ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை நூறு முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒருமுறை சொன்னாலே அது நடக்கும். அஇஅதிமுக தோற்க வேண்டும் என்பதுதான் டிடிவி தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக வேண்டும் என்பது ஸ்டாலின் ஆசை. ஆனால் எங்களது கூட்டணி ஆசை என்னவென்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்குவது போன்ற வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.

ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்துவிட்டு கொச்சையான வார்த்தைகள் மூலம் தனிநபர் விமர்சனங்களை அவர் செய்து வருகிறார் என்னை, டாக்டர் ராமதாசை, முதலமைச்சர் துணை முதலமைச்சர் பிரதமர் ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம். ராகுல் பிரதமராவதும் ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.

இதனை தெரிந்து கொண்டு மூன்றாவது அணிக்கு போகும் நோக்கில் சந்திரசேகரராவிடம் ஒரு மணி நேரம் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதில் இருந்து எதிரணி மிகுந்த குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார் நீட் தேர்வு, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை, கச்சத்தீவை தாரை வார்த்தது போன்றவை திமுக ஆட்சிக் காலத்திலேயே அனுமதிக்கப்பட்டது.

அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். காவேரியில் மிகப்பெரிய பச்சை துரோகம் செய்தது. திமுக ஜனாதிபதியாக ஸ்டாலினுக்கு தகுதி உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகிறார். தமிழகத்துக்கு தேவையான முக்கிய திட்டங்களுள் ஒன்றாக கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உள்ளது.

கோதாவரி ஆற்றில் 1500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. ரூ.60,000 கோடி செலவில் கோதாவரி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டுவருவோம் என நிதின்கட்காரி கூறியிருக்கிறார் கடலில் கலக்கும் நீரின் 1000 டி.எம்.சி-யை ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்யப்படும். தமிழகத்திற்கு 200 டிஎம்சி கிடைக்கும். ஆனால் கர்நாடகாவிடம் இருந்து 177 டிஎம்சி தான் பெற முடிகிறது.

அந்த வகையில் கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் 25 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறும். தேர்தல் முடிவுக்குப் பிறகு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த கோரிக்கையை விரைவில் செயல்படுத்துவோம். எனவே இதனை நிறைவேற்றித்தர அஇஅதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.