தற்போதைய செய்திகள்

கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானம், மகளிர் குழுக்களுக்கு உடனடி கடனுதவி – தேனி வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் உறுதி…

தேனி:-

படித்த இளைஞர்கள், பெண்களுக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திட இப்பகுதியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்திடவும். வேலை வாய்ப்பு பெற பயிற்சி முகாம் அமைக்கவும் முயற்சி செய்வேன் என்று தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் தெரிவித்துள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத் குமார் ஆதிபட்டி, வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், கோடாங்கிபட்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், உப்பார்பட்டி, சிலமலை, நாகலாபுரம், தர்மத்துப்பட்டி, டொம்புச்சேரி, வினோபாஜி காலனி உள்ளிட்ட போடிநாயக்கனூர் ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இப்பிரச்சாரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், போடி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.சற்குணம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப்பிரச்சாரத்தின் போது கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

போடி – மதுரை இடையே ரயில் சேவையை நிறுத்தியது திமுக-காங்கிரஸ் கூட்டணி. எங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக மதுரை – போடி இடையே ரயில் சேவை துவங்கப்படும். படித்த இளைஞர்கள், பெண்களுக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திட இப்பகுதியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்திடவும். வேலை வாய்ப்பு பெற பயிற்சி முகாம் அமைக்கவும் முயற்சி செய்வேன்.

தேனி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களையும், சுயஉதவி குழுக்களுக்கு தொழில் செய்ய தேவையான கடன் உதவியையும் விரைவில் பெற்றுத்தருவேன். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து நிறைவேற்றுவேன்

போடி தொகுதிக்குட்ட பகுதிகளில் ரூ. 2000 கோடி நிதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. கொட்டக்குடி ஆற்று பகுதியில் தடுப்பணைகள் கட்டப்படும். புரட்சித்தலைவி அம்மா வழியில் நடைபெற்று வரும் கழக அரசு முத்தரையருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. போடி தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் நான் கழக வேட்பாளர்களுக்காக வாக்குசேகரிக்க பல முறை வந்துள்ளேன். தற்போது நானே கழக வேட்பாளராக நிற்கிறேன். உங்களுக்காக பணியாற்ற, உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசினார்.

முன்னதாக பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஆரவாரத்துடனும் வரவேற்றனர். இப்பிரச்சாரத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.