தற்போதைய செய்திகள்

கிராமப் புறங்களில் 2 மாதத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி…

விருதுநகர்:-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், வெம்பக்கோட்டை ஒன்றிய கிராமங்களுக்கு 2 மாதத்தில் தாமிரபரணி தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள புல்லக்கவுண்டன்பட்டி,கொம்மிங்காபுரம், இந்திராகாலனி, சிவசங்குபட்டி, பழைய ஏழாயிரம்பண்ணை, கோவில்செல்லையாபுரம், ரெட்டியாபட்டி, சாமீயாத்தியான்பட்டி, பாண்டியாபுரம், ஊத்துப்பட்டி உட்பட 22 கிராமங்களில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். ரெட்டியாபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் மக்களோடு மக்களாக அமர்ந்து கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து இரட்டை இலை சின்னத்திற்கும், கொட்டும் முரசு சின்னத்திற்கும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது;-

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சட்ட போராட்டத்தினால் தான் இன்று அனைத்து பட்டாசு ஆலைகளும் திறக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பட்டாசு ஆலை அதிபர்களை நான் அழைத்துக் கொண்டு 10 நாட்களாக தங்கி சம்பந்தப்பட்ட பட்டாசு அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக இன்று பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது.

சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஒன்றிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் தாமிரபரணி கூட்டு்க்குடிநீா் திட்டத்தை கழக அரசு தான் கொண்டு வந்தது. இத்திட்டம் முடிவு பெற்று தற்போது சோதனை ஓட்ட நிலையில் உள்ளது. அனைத்து பணிகளும் 100 சதவீதம் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் 2 மாதத்தில் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி தண்ணீா் கிடைத்து விடும். தாமிரபரணி தண்ணீர் வரும் பட்சத்தில் சாத்தூர் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் எந்த கிராமத்திலும் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்களுக்காக பணியாற்றிட நாங்கள் தயாராக உள்ளோம். என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கிராமங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து மக்கள் நலதிட்டங்களை நிறைவேற்றிட இரட்டைஇலை சின்னத்திற்கும், முரசு சின்னத்திற்கும் வாக்களித்து கழக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

இந்த பிரச்சாரத்தின் போது கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட புதிய தமிழகம், தே.மு.தி.க, பாஜக. பா.ம.க, ஜான்பாண்டியன் கட்சி, நடிகர் கார்த்திக் கட்சி, சேதுராமன் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.