தற்போதைய செய்திகள்

கிராம வளர்ச்சியில் அக்கறை கொண்ட அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் – ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை

கிராம வளர்ச்சியில் அக்கறை கொண்ட அ.இ.அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ச.ம.க போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகளினுடைய வேட்பாளர்களின் வெற்றிக்கு த.மா.கா.வினர் தொடர் பணியாற்றி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும்.

உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் இருந்தால் தான் குக்கிராமம், கிராமம் உள்ளிட்ட பகுதிகளின் அடிப்படையான, அத்தியாவசிய, மக்களின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதற்காக நடைபெற இருக்கின்ற இந்த முக்கியமான தேர்தலில் அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சியினர் எல்லோரும் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திட தங்களின் பணியை சிறப்பாக மேற்கொள்கிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தை ஆளுகின்ற அ.இ.அ.தி.மு.க கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொடுத்து கிராம வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வருகிறது. எனவே உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்பட அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள நாமெல்லாம் ஓரணியில் இருந்து செயல்பட்டு அ.இ.அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.