தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி- பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரிகள் – சட்டப்பேரவையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை:-

கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து அதிகம் நிகழ்கிறது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள பெங்களூர், தருமபுரி,வேலூர் செல்ல வேண்டியுள்ளதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு பெரும் விபத்து நடைபெற்ற போது நானே நேரில் சென்று பார்வையிட்டேன், அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு சி.டி. ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரூ.6.5 கோடி செலவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது 1 மாதத்தில் திறக்கப்படவுள்ளது. அதே போன்று ஜெய்கா திட்டத்தின் மூலம் ரூ.11.68 கோடியில் அதி நவீன மருத்து உபகரணங்களும் நிறுவப்படவுள்ளது. இது போன்று 60 முதல் 70 கோடி சிறப்பு திட்டங்கள் கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்து நடக்கும் இடம் சூலூர் என கண்டறியப்பட்டு, அங்கு 24 மணி நேரம் செயல்படக்கூடிய விபத்து, காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்த முடிவு செய்து, அங்கு சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஆகவே வரும் காலங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும். இதேபோல் பெரம்பலூரிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளித்தார்.