திருநெல்வேலி

கீழப்பாவூரில் ரூ.2 கோடியில் பாலம் பணி : கே.ஆர்.பிரபாகரன் எம்.பி. முன்னிலையில் திருநெல்வேலி ஆட்சியர் துவக்கி வைத்தார்…

திருநெல்வேலி:-

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் பாலம் பணி, கீழப்பாவூரில் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டும் பணி ஆகிய பணிகளை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் ரூ.18.5 லட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர்கள் சங்க புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பிரபாகரன் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கதர் கிராமத் தொழில்துறை உதவி இயக்குநர் கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ஆலங்குளம் வட்டாட்சியர் பிரபாகரன் அருண்செல்வம், கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், மறைந்த முதலமைச்சரால் 20.09.2016 அன்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளில் ஒன்றான மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்கள் செய்வதற்கான புதிய தொழிற்கூடங்கள் அமைத்திட தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் கீழப்பாவூரில் மண்பாண்டத்தொழிலாளர் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தில் தொழிற்கூடம் அமைத்திட ஆணையிடப்பட்டது. அதன்படி 1119 சதுரடி பரப்பளவில் ரூ.18.42 லட்சத்தில் புதிய தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற் கூடங்கள் கட்டித் தருவதன் மூலம் மண்பாண்டத் தொழிலாளர்களின் உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரித்து அவர்களது பொருளாதார நிலையும்,வாழ்க்கைத் தரமும் மேம்படும்.

இச்சங்கத்தின் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மழைக்கால பராமரிப்பு நிவாரணத்தொகை ரூ.5,000 ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சங்க உறுப்பினர்களுக்கும் மாவட்டத்தில் உள்ள மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மண்பாண்ட மின்சார சக்கரம் ரூ.20,400 மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

இதேபோல் கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பில் பாலம் பணி, கீழப்பாவூரில் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டும் பணி ஆகிய பணிகளை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் கீழப்பாவூர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான புதிய நன்மைக்கூடத்திற்கான கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ஆலங்குளம் வட்டாட்சியர் பிரபாகரன் அருண்செல்வம், கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.