சிறப்பு செய்திகள்

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – தமிழக அரசு வேண்டுகோள்…

சென்னை:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருவதை சிக்கனமாக பயன்படுத்துமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 556 கூட்டு குடிநீர் திட்டங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் மூலமாக 4,23,00,000 மக்கள் தினமும் பயன்பெற்று வருகிறார்கள். இந்த கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக நாளொன்றுக்கு 2146 மில்லியன் லிட்டர்கள் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம், தமிழ்நாட்டின் மழை அளவு, வழக்கத்தை விட 69 விழுக்காடு குறைந்து உள்ளதால், இந்த வருடம் சராசரியாக 1856 மில்லியன் லிட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் திட்டங்களின்படி, அனைத்து திட்டங்களிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை, வரையறுக்கப்பட்ட அளவில் குடிநீர் சென்றடைவதை உறுதிபடுத்திக்கொள்ள, தமிழகம் முழுவதும் வாரியத்தின் மூலம் 258 சிறப்பு குழுக்கள், உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் என்ற நிலையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மேற்பார்வைப் பொறியாளரின் நேரடி பார்வையின் மூலமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், அந்தந்த மாவட்டத்தில் பணிபுரிகின்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் அனைவரும், சம்மந்தப்பட்ட உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), உதவி இயக்குநர் (கிராம ஊராட்சிகள்) அவர்களோடு கலந்து பேசி தினசரி வரையறுக்கப்பட்ட குடிநீர் ஊரகக் குடியிருப்புகளுக்கும், நகரங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறதா என கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் ஆதாரம் பொய்த்துப்போன மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் சாத்தியக்கூறுகளற்ற குடியிருப்புகளுக்கு, தற்போது குடிநீர் மேம்பாட்டிற்கான மாற்று ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்கு அவ்வப்போது தேவைப்படும் தொழில்நுட்ப ஆலோசனைகள் போன்ற உதவிகளையும் செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பராமரிப்புத் திட்டத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் தொய்வின்றி கிடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலேகூறப்பட்ட அலுவலர்கள் பராமரிப்பு பணிகளை கண்காணிக்கும் பொருட்டு உத்தேச பயண அறிக்கையும் அதன் மீது தினசரி மேற்கொள்ளும் நடவடிக்கையை சம்பந்தப்பட்ட களப் பொறியாளர்களால் மேற்பார்வைப் பொறியாளர் அவர்களுக்கு வாரம் தோறும் அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் பெரும்பான்மையான பொறியாளர்களால் பராமரிப்புத் திட்டத்தில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம், சென்னை அலுவலகத்தில் இணைத் தலைமைப் பொறியாளர் (இயக்குதல் மற்றும் பராமரிப்பு) அவர்கள் தலைமையில் சிறப்புக் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டு அதன் அலைபேசி எண் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது மக்கள் அவ்வப்போது குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்திற்கு (தொலைபேசி எண். 94458 02145 ) தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், குடிநீர் தரப் பரிசோதனை கூடம் இயங்கி வருகின்றது. பொது மக்கள் குடிநீரின் தரப் பரிசோதனை செய்ய, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பரிசோதனைக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளுக்கு நில நீர் ஆதாரம் மற்றும் மழை நீர் சேகரிப்பு பற்றிய தகவல் தரும் பணிகளும், ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகளும், அந்தந்த மாவட்ட அளவில் உள்ள வாரியத்தைச் சார்ந்த நில நீர் வல்லுநர்களால் செய்து தரப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு சராசரி மழை அளவு 960 மி.மீ. ஆகும். ஆனால் 2018 ஆம் ஆண்டு பெய்த மழை அளவு 811.7 மி.மீ. தமிழகம் முழுவதும் ஜனவரி 2019 முதல் மே 2019 முடிய உள்ள மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 108 மி.மீ. ஆகும். ஆனால் பெய்துள்ள மழை அளவு 34 மி.மீ. எனவே சராசரியை விட 69 விழுக்காடு மழை குறைவாக பெய்துள்ளது.

தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அளித்து வருகிறது. எனவே, குடிநீரை பொதுமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.