தற்போதைய செய்திகள்

குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்…

மதுரை:-

குடிநீர் திட்டப் பணிகளுக்கு ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக கள்ளிக்குடி ஒன்றியம், அகத்தாப்பட்டி மற்றும் வில்லூர் கிராமங்களில் ஆண்டிப்பட்டி – சேடப்பட்டி கூட்டு குடிநீர்த்திட்டத்தின் கீழ் வறட்சி நிவாரண திட்டப்பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஆண்டிப்பட்டி – சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இத்தொகுதிக்கு உட்பட்ட 2 பேரூராட்சிகள் மற்றும் 83 ஊராட்சிகளிலுள்ள 217 ஊரகக் குடியிருப்புகளுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய 5.70 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் ஊறிஞ்சு கிணறுகளில் கொடுத்திறன் குறையும் பட்சத்தில் கடைநிலை குடியிருப்புகளுக்கு கோடை காலத்தில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக பிரதான மேல்நிலைத் தொட்டி, பிரதான தரைமட்ட தொட்டிகளில் அருகில் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டு கள்ளிக்குடி ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ள இடங்களான வில்லூர்-2, பகுதிகளில் உள்ள 30 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் பணிகள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ஆழ்துளை கிணறு மற்றும் அதனை சார்ந்த பணிகள் ரூ.79.12 லட்சம் மதிப்பீட்டில் செய்து 76 குடியிருப்பு மக்கள் 3.91 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக பயன்பெறும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் எஸ்.டி.ஆர்.எப்.லிருந்து ரூ.242.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கண்காணிப்பு பொறியாளர் ரவீந்திரன், செயற்பொறியாளர் ஹரிபாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் கருப்பையா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.