தற்போதைய செய்திகள்

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு போர்க்கால நடவடிக்கை – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. தகவல்…

திருவள்ளூர்:-

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் பகுதிகுட்பட்ட 82-வது வார்டு குயில்குப்பம் இந்தியன் வங்கி காலனி, 81 வது வார்டு அம்பத்தூர் ரயில் நிலையம் சாலை, 85 வது வார்டு மற்றும் 86 வது வார்டு அன்னை சத்தியாநகர் போன்ற பகுதிகளில் வாழும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நான்கு ஆழ்துளை போர்வெல் மூலம் பெறப்படும் தண்ணீரானது குடிநீர் வாரிய குடிநீர் நீர் தேக்க தொட்டிகளில் சேமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பருவ மழை பொய்த்து போனதால் சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை போக்க முதல்வர் ஆணைக்கிணங்க தமிழக அரசும், சென்னை குடிநீர் வாரியமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக குறுகலான சாலை உள்ள பகுதிகளில் சிறிய குட்டியானை வண்டிகளிலும், பெரிய லாரிகளில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று பிடிக்காத வகையில் ஆறு டேப்புகளில் குடிநீர் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் உள்ள அடி பம்புகளில் குடிநீர் வரும் வகையில் இஞ்சக்ட் முறையிலும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக இது திகழ்வதால் அம்பத்தூர் பகுதியில் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வீதி வீதியாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம். மேலும் பல்வேறு இடங்களில் இது போன்று போர்வெல் அமைத்து குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அம்மாவின் அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிவமுருகன், கமல்நாதன், வீரலட்சுமி, நித்யா, அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் என்.அய்யனார், எம்.டி.மைக்கேல்ராஜ், டன்லப் எஸ்.வேலன், ரவி,பிரபாகரன், மோகன், கேபிள்ராஜசேகர், டி.மணி, ஒய்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.