திருவள்ளூர்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை – திருவொற்றியூர் மக்களிடம் முன்னாள் எம்.எல்.ஏ. உறுதி…

திருவள்ளூர்:-

திருவொற்றியூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் உறுதி அளித்தார்.

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் குடிநீர் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இவர்களிடம் பகுதி பொறியாளர் விஜயபிரகாஷ் அரசின் நிலைகளையும் குடிநீர் தேவைகளையும் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விளக்கி கூறினார்.

முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பேசியதாவது:-

தமிழகத்தில் மழையின்மை காரணமாக சென்னையின் முக்கிய ஆதரமாக விளங்கும் ஏரிகளில் நீர் வற்றியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு குடிநீர் வாரிய மேலாண்மை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.

இனிவரும் நாட்களில் தெருக்குழாய் இல்லாத பகுதிகளில் புதிய இரட்டை குழாய்கள், குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்வதற்கு துரித நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உதவி பொறியாளர் விஜயலட்சுமி அதிமுக வட்டசெயலாளர் எம்.கண்ணன், புதுகைபாண்டியன், எஸ்.பி.புகழேந்தி, கேபிள்ரவி, அலெக்ஸ், முருகன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஏ.,மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.