நீலகிரி

குன்னூர்- ரன்னிமேடு இடையே சிறப்பு ரயில் இயக்கம் – ரம்ஜானை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு…

குன்னூர்:-

ரம்ஜானை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் குன்னூர்-ரன்னிமேடு இடையே 5 கிலோ மீட்டர் குறுகிய தூர சிறப்பு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

ரயில்வே நிர்வாகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை குன்னூரில் இருந்து 5 நாள்களுக்கு ரன்னிமேடு வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் மூன்று பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 56 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 30 இருக்கைகள் என மொத்தம் 86 இருக்கைகள் கொண்ட இந்த ரயில் குன்னூரில் இருந்து காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு 5 கிலோ மீட்டர் வரை பயணித்து ரன்னிமேடு பகுதிக்கு சுமார் 12 மணி அளவில் சென்றடையும்.

மீண்டும் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இருந்து பகல் 1 மணிக்குப் புறப்பட்டு 1.30 மணிக்கு குன்னூர் வந்தடையும். இதற்கிடையில், மலை குன்றுகள், அருவிகள், மலை குகைகள், பள்ளத்தாக்குகள், ரன்னிமேடு அருகில் உள்ள இயற்கை எழில் மிகுந்த காட்டேரி பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் இந்த கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்புக்கு ரூ.450, இரண்டாம் வகுப்புக்கு ரூ.320 என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதில், முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பயணக் கட்டணத்தில் பயணிகளுக்கு உணவுப் பொருள்கள், தேநீர் மற்றும் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் ஆகியவை அடங்கும்.

ஏற்கெனவே சீசனுக்காக தினசரி இயக்கப்பட்ட இந்த மலை ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் தற்போது மீண்டும் ரம்ஜானுக்காக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.