சிறப்பு செய்திகள்

குமரியில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் – பிரதமர் பங்கேற்ற விழாவில் முதல்வர் கோரிக்கை…

மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களை இயற்கை இடர்பாடுகளின் போது, துரிதமாக மீட்பதற்கு ஏற்ப, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்திட வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கன்னியாகுமரியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையில் ரயில் இணைப்பை புதுப்பித்தல் மற்றும் புதிய பாம்பன் இணைப்புப் பாலம் கட்டும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் மதுரை – சென்னை எழும்பூர் இடையே புதிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்க விழாவில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-

இன்றையதினம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜி தமிழகத்திற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ஏற்கனவே முடிவுற்ற பாலப் பணிகளை திறக்கின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்கு உங்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் அவருக்கு நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் மீது, குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு, தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கும் பாரதப் பிரதமரை மீண்டும் வருக! வருக! என்று உங்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வரவேற்கிறேன்.

I welcome the Hon’ble Prime Minister who has come to Kanniyakumari for inaugurating and laying foundation stone for various schemes, which would benefit the people of Tamil Nadu.

கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவிலான மீனவ கிராமங்களைக் கொண்டதாகும். இங்கே விவசாயப் பெருங்குடி மக்களும் அதிக அளவில் உள்ளனர். இங்கு ரப்பர் உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகிறது.

நீலக்கடல் ஓரத்திலேநித்தம் தவம் செய்யும் குமரி என்ற மகாகவியின் வரிகளுக்கிணங்க தமிழ்நாட்டின் தென்கோடியில் தவக்கோலத்தில் இருந்து கொண்டு அருள் பாலிக்கும் குமரி அன்னை வீற்றிருக்கும் மாவட்டம் குமரி மாவட்டம்.இங்கு முக்கடல் மட்டுமல்ல. மூன்று மதங்களும் சங்கமிக்கின்றன. சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அய்யா வைகுண்டசாமி திருக்கோயில் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. அனைத்து சமயத்தினரும் சகோதர பாசத்துடன் வாழும் மாவட்டம் கன்னியாகுமரி.

நாட்டில் சமுதாய மாற்றத்தை உருவாக்க பாடுபட்ட இளைஞர் சுவாமி விவேகானந்தர் தவமிருந்து, அறிவு விளக்கம் பெற்றதும் முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் தான். மேலும் இம்மாவட்டம் கல்லாதவர்களே இல்லாத அளவுக்கு, கற்றவர்கள் நிறைந்த மாவட்டமாகும்.சுதந்திர போராட்ட வீரர்கள் செண்பகராமன், மார்ஷல் நேசமணி, ஜீவானந்தம், மாபெரும் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோரும், சினிமா துறையில் புரட்சி செய்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அவர்களைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் அதிக அளவிலான திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:

• மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், 96.72 கோடி ரூபாய் செலவில் குளச்சலிலும், 81.22 கோடி ரூபாய் செலவில் சின்னமுட்டத்திலும், மீன்பிடி துறைமுகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, மீனவர்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

• 97.4 கோடி ரூபாய் செலவில் தேங்காய்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளது.

• இது தவிர, நீரோடி, வள்ளவிளை மற்றும் மார்த்தாண்டம்துறை ஆகிய இடங்களில் 116 கோடி ரூபாய் செலவில் நேர்கல் சுவர் அமைக்கும் பணியும், தேங்காய்பட்டினத்தில் குளிர்சாதன மற்றும் நவீன பதப்படுத்தும் வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைத்திட தேவையான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

• விளவங்கோடு தாலுகா, சின்னத்துரையில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புச் சுவரை மறு சீரமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

• விளவங்கோடு தாலுகா, பூத்துரையில் 14 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

• ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்ற வகையில் 50 சதவீத மானியத்தில் 26 ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகள் கொள்முதல் செய்ய மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில், 50 மீனவ குழுக்களுக்கு, குழு ஒன்றுக்கு தலா 2 செயற்கைக் கோள் தொலைபேசிகளும், 3 நேவிக் கருவிகளும் சமீபத்தில் மாண்புமிகு அம்மாவின் அரசால் மீனவ மக்களுக்கு வழங்கப்பட்டன.

• கடலோர மக்களை பாதுகாக்கும் வகையில், கன்னியாகுமரி, கிள்ளியூர், குளச்சல், நாகர்கோவில் ஆகிய கடலோர பகுதிகளில் பல இடங்களில் சுமார் 25 கோடி ரூபாய் செலவில் கடலரிப்பு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 76.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளவங்கோடு மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் 5 அணைகள் புனரமைக்க ஆணை வழங்கப்பட்டு, அதில் 4 பணிகள் முடிவுற்றும், ஒரு பணி முன்னேற்றத்திலும் உள்ளது. இதன் மூலம் 97 ஆயிரத்து 357 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

• பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில், 15.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழை, எளியோர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

• ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 821 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 ஆயிரத்து 987 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.• நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 53.67 கோடி ரூபாய் செலவில் 157.180 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 23 பாலங்களும், சிறு பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

• மாநிலங்களை இணைக்கும் சாலை நிதி திட்டத்தின் கீழ் அண்டை மாநிலமான கேரளாவை இணைக்கும் வகையில், 95.85 கி.மீ. நீள சாலைப் பணிகள் 90.91 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• மிகக் கடுமையாகத் தாக்கிய ஒக்கி புயலின் போது இறந்த மற்றும் காணாமல் போன 204 மீனவர் குடும்பத்தினருக்கு அம்மாவின் அரசு மீனவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு குடும்பம் ஒன்றுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40.80 கோடி ரூபாய் நிவாரணமும், சேதம் அடைந்த படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களுக்கு 7.80 கோடி ரூபாய் நிவாரணமும் வழங்கியது.

• இறந்த மற்றும் காணாமல் போன மீனவர் குடும்பங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களது வாரிசு தாரர்களுக்கு தாயுள்ளத்துடன் அரசுப் பணியும் வழங்கப்பட்டுள்ளது.

• ‘ஒக்கி’ புயலால் சேதமடைந்த சாலைகளை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகள் 28.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

• 30 ஆயிரத்து 788 மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 15 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 1,524 மலைவாழ் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக 76 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

• ‘ஒக்கி’ புயலின் போது சேதமடைந்த வாழை, ரப்பர் மற்றும் கிராம்புப் பயிர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர்களுக்கு 10 கோடியே 99 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.

• கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் அதிக அளவு மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றை சந்தைப்படுத்த விவசாயிகளும், வணிகர்களும் அனுபவித்து வந்த சிரமத்தைக் களைந்திடும் பொருட்டு, 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 75 கடைகளுடன் கூடிய பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மலர் வணிக வளாகம் தோவாளையில் அமைக்கப்பட்டு, 30.1.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

• பொதுப்பணித் துறையின் சார்பில் 15.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளவங்கோடு வட்டத்தில் இரையுமன்துறை அருகில் குழித்துறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

• அரசின் நலத் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும் பொருட்டு, நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக நிலை உயர்த்த அம்மாவின் அரசால் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், கிள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டமும், செருப்பலூரை தலைமையிடமாகக் கொண்டு திருவட்டார் வருவாய் வட்டமும் உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

• மேலும், அவ்வப்போது இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்படும் இம்மாவட்டத்தில், 20.13 கோடி ரூபாய் செலவில் சுமார் 15 இடங்களில் 7 ஆயிரம் நபர்கள் தங்கும் வகையில் இயற்கை பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையக் கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

• கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற மாவட்டம் என்பதால், 2.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற நிரந்தர கைவினைப் பொருட்கள் கண்காட்சி வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

• இம்மாவட்ட மண்ணின் மைந்தரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகத்துடன் கூடிய ஒரு மணி மண்டபம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அம்மாவின் அரசு நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் ஒரு சிலவற்றை மட்டும் தான் இங்கே கூறியுள்ளேன். இது போன்ற பல்வேறு பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

மேலும், மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையும், தேசிய நெடுஞ்சாலை 32 மற்றும் 7ஐ இணைக்கும் பணக்குடி-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையும், மார்த்தாண்டம் சந்திப்பு மற்றும் பார்வதிபுரம் சந்திப்பில் பாலங்கள் கட்டும் பணிகளும் முடிக்கப்பட்டு, பாரதப் பிரதமரால் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.

இது தவிர, மதுரை-செட்டிக்குளம் பிரிவுக்கும், செட்டிக்குளம்-நத்தம் பிரிவுக்கும் நான்கு வழிச் சாலை அமைக்கவும், ராமேஸ்வரத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இருந்த ரயில் சேவை தொடர்பையும், பாம்பன் பாலத்தையும் மீள அமைக்கும் திட்டங்களுக்கும், கன்னியாகுமரியில் சாலை பாதுகாப்புப் பூங்கா மற்றும் போக்குவரத்து அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.மதுரை முதல் சென்னை வரையிலான தேஜாஸ் அதிவேக ரயில் சேவையை இன்று பாரதப் பிரதமர் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.

மாநில அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் போக, மத்திய அரசும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். வளர்ச்சித் திட்டங்களில் காட்டும் அக்கறைக்கு இணையாக நாட்டின் பாதுகாப்பிலும் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது என்பதை இந்த நேரத்தில் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அந்த வகையில், உலகத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதற்கு நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக, வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர் வருகை புரிந்துள்ள இந்த நேரத்தில், தமிழ்நாடு அரசின் சார்பிலும், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பிலும் ஒரு கோரிக்கையை வலியுறுத்த விரும்புகிறேன். அதாவது, இயற்கை பேரிடர்களினால் அதிக அளவில் பாதிக்கப்படும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும். எனவே, மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களை இயற்கை இடர்பாடுகளின்போது துரிதமாக மீட்பதற்கு ஏற்ப, ஒரு ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்திட வேண்டும் என்று நான் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

அக்கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து இம்மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் தேவையினை நிறைவேற்றித் தந்து, மீனவ மக்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு,கடந்த 5 ஆண்டு காலமாக பாரதப் பிரதமர் இந்திய நாட்டை வழி நடத்திச் செல்வது மட்டுமல்ல, இந்திய நாட்டு மக்களுக்கே பாதுகாப்பாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு ஒட்டுமொத்த நாடே அவர் பின் நிற்கின்றது, தமிழ்நாடும் அவர் பின் நிற்கின்றது.

இவ்வாறு முதல்வர் உரையாற்றினார்.