தற்போதைய செய்திகள்

குமாரபாளையம், திருச்செங்கோடு குடிநீர் திட்டம் விரைவில் நிறைவு பெறும் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்…

நாமக்கல்:-

குமாரபாளையம், திருச்செங்கோடு குடிநீர் திட்டம் விரைவில் நிறைவு பெறும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு (எ) மணிமாறன் ஆதரித்து குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு (எ) மணிமாறனுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியில் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு வருகின்ற வகையில் முதலமைச்சர் சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். இந்த பகுதியை பொறுத்தவரை அம்மாவின் ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். நாட்டின் பிரதமராக மரியாதைக்குரிய மோடிஜி வரவேண்டும், நாட்டிற்கு ஒரு வலிமையான தலைவர் வேண்டும், பாதுகாப்பான தலைவர் வேண்டும், நிலையான ஆட்சி வேண்டும், அதற்காக நீங்கள் கழக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

எதிர்க்கட்சியை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கவில்லை. 10 பிரதமர் வேட்பாளர் எதிர்க்கட்சியில் இருக்கின்றனர். அப்படி இருக்கின்ற நிலையில் இந்த நாடு தாங்குமா? கழகத்தின் வேட்பாளர்கள் மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்கள் ஆகியோரை வெற்றி பெற செய்தால் தமிழகத்தின் உரிமையை கேட்டுப் பெற முடியும்.

இந்தப் பகுதியை பொறுத்தவரை நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அம்மாவின் நல்லாசியுடன் அமைச்சராக இருக்கின்றேன். இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நான் கொண்டு வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட 8 ஆண்டு காலத்தில் குமாரபாளையம் தொகுதி மட்டுமல்ல நாமக்கல் மாவட்டம் முழுமையான வளர்ச்சி என்ற வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

பள்ளிபாளையத்தில் புதிதாக இரண்டு பாலம் கட்டி இருக்கிறோம். அதேபோல அனைத்து சாலைகளையும் கொண்டுவந்து இருக்கிறோம். இப்பொழுது குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதற்காக குமாரபாளையம் தொகுதிக்கும், திருச்செங்கோடு தொகுதிக்கும் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் இப்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் அந்த பணி முடிவடைந்து விடும். இப்பணி முடிவடைந்ததும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உங்கள் அனைவருக்கும் இனிமேல் வழங்கப்படும். அதன் பிறகு குடிநீர் பிரச்சினையே இருக்காது. நாங்கள் செய்த சாதனைகளை சொல்லி வாக்குகள் கேட்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகளை பொருத்தவரை 2006 முதல் 2011 வரை என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அது அம்மாவுடைய ஆட்சி தான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இங்கே இருக்கின்ற கழகத்தினர் யாரும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓட்டல் உரிமையாளரை அடிப்பது கிடையாது. அது திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் செய்வார்கள். நாங்கள் உங்களோடு இருப்பவர்கள். இந்த பகுதியை சேர்ந்தவர்கள். உங்களில் ஒருவராக இருந்து பணியாற்றி கொண்டிருக்கிறோம். கழக அரசின் சாதனை தி்ட்டங்கள் தொடர வெங்கு (எ) மணிமாறனுக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.