தற்போதைய செய்திகள்

குற்றம் சொல்லி வாக்கு கேட்பது தான் தி.மு.க.வின் வாடிக்கை – முதலமைச்சர் கடும் தாக்கு…

திருப்பூர்:-

குற்றம் சொல்லி வாக்கு கேட்பது தான் தி.மு.க.வின் வாடிக்கை. ஆனால் நாங்கள் மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு ஜி. மணிமாறனை ஆதரித்து தாராபுரம் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- 

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால். அ.இ.அ.தி.மு.க மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக ஸ்டாலின் பேசுகிறார். 1999-ல் தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது.

பா.ஜ.க. ஆட்சியின் போது மத்திய மந்திரிசபையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. இவர்களோடு கூட்டணி வைத்தால் பா.ஜ.க நல்ல கட்சி, எங்களோடு கூட்டணி வைத்தால் பா.ஜ.க. மதவாத கட்சியா, இது என்ன நியாயம்? நாங்கள் மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் எங்கள் மீது குற்றம் சொல்லி வாக்கு கேட்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்.

தி.மு.க. எதிர்க்கட்சி, அவர்கள் எந்த வாக்குறுதியை வேண்டுமானாலும் தேர்தல் நேரத்தில் அறிவிக்கலாம். அ.இ.அ.தி.மு.க. ஆளுகின்ற கட்சி எது மக்களுக்கு பயனுள்ள திட்டம், எந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதை ஆராய்ந்து தான் மக்களுக்கு வாக்குறுதியை அளிக்கிறது. தி.மு.க. அளிக்கின்ற எந்த வாக்குறுதியையும் அவர்களால் நிறைவேற்ற முடியாது.

ஒரு வருடத்திற்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின்கட்காரி சென்னைக்கு வருகை தந்த போது வேளாண் பெருமக்களின் இன்னல்களை நிரந்தரமாக தீர்த்திட, காவேரி- கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அப்போதே மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் முடிந்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றவுடன் காவேரி- கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என நான் அறிவித்தேன். தேர்தல் வருவதற்குள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்பது தான், எங்களது நோக்கம். ஆனால், தி.மு.க. ஏழை தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற நிதியை தடுத்திடும் வகையில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து, தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும்.

இந்த பகுதி விவசாயிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகப்படியாக சாகுபடி செய்கின்றனர். இவர்கள் சாகுபடி செய்யும் வேளாண் பொருட்களை விற்பனை செய்யவும் சேமித்து வைக்கவும் மாவட்டங்கள் தோறும் உணவுப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படும். இந்த உணவுப் பூங்காவிற்கு மாவட்டம் தோறும் உள்ள உணவுப் பூங்கா மூலம் விவசாயிகளிடத்தில் நேரடியாக கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத பட்சத்தில் அப்பூங்காவில் உள்ள குளிர்பதனக் கிடங்கில் சேமித்து வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் கிடையாது. விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்க சேலம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கிடையே900 ஏக்கரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் நாட்டு மாட்டினங்கள் ஆடு, கோழி, மீன் வளர்ப்பது குறித்து தெரிந்து கொள்ளவும் அவ்வினங்களை பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.

இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மாவின் அரசு என்றும் அரணாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வருகிறது. இப்தார் நோன்பு கஞ்சிக்காக 4900 மெட்ரிக் டன் அரிசி வழங்கிய அரசு, அம்மாவின் அரசு. காஜிகளுக்கு மாதம் மதிப்பூதியமாக தலா ரூ.20,000 வழங்கும் அரசு, அம்மாவின் அரசு. தமிழ்நாட்டில் ஜாதி, மத கலவரங்கள் ஏதுமில்லை. தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக இருந்து வருகிறது. இந்த அரசு அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றாக பாவித்து அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.

முத்தலாக் மசோதா தடைச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, அதை எதிர்த்து குரல் கொடுத்த அரசு, அம்மாவின் அரசு. இது போன்று அனைத்து நிலைகளிலும் இஸ்லாமிய பெருமக்களை போற்றி பாதுகாத்து வரும் அரசாக, அம்மாவின் அரசு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற்று விடலாம் என்ற எதிர்கட்சியின் கனவு, ஒருபோது பலிக்காது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வெங்கு ஜி. மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.