இந்தியா மற்றவை

கூடுதலாக 30 ஆயிரம் இந்திய ஹஜ் பயணிகளுக்கு அனுமதி – பிரதமர் மோடியின் கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்றது…

ஒசாகா:-

இந்தியாவில் இருந்து கூடுதலாக 30 ஆயிரம் முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் புனிதப் பயணம் வருவதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

ஜப்பான், ஒசாகா நகரில் நடந்துவரும் ஜி20 மாநாட்டில் சவுதிஅரேபிய இளவரசர் முகமது பின் சல்மானிடம், பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த நிலையில் அதை அவர் ஏற்றுக்கொண்டு அனுமதியளிப்பதாக உறுதியளித்துள்ளார். இந்தியாவில் இருந்து தற்போது ஆண்டுக்கு 1.70 ஆயிரம் முஸ்லிம்கள் மெக்காவுக்கு புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.

இந்த அனுமதி மூலம் 2 லட்சம் முஸ்லிம்கள் செல்ல முடியும்.ஜி20 மாநாட்டின் இடையே சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன், பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். அவருடன் முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்

இந்த இருதரப்பு பேச்சு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விஜய் கோகலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் புனித ஹஜ் பயணமாக 1.70 லட்சம் முஸ்லிம்கள் சென்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, சவுதிஅரேபிய இளவரசர் முகமது பின் சல்மானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இளவரசர் சல்மான், கூடுதலாக 30 ஆயிரம் இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் புனிதபயணம் வர அனுமதி அளிப்பதாக உறுதியளித்துள்ளார். இதன் மூலம் இனிமேல் 2 லட்சம் பேர் ஹஜ் புனிதப்பயணம் செல்ல முடியும். இது மிகவும் முக்கியமான முடிவு. 2 லட்சம் முஸ்லிம்களுக்கு ஹஜ் புனிதப்பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவுக்கு அதிகமான விமானங்களை இயக்கவும், சுற்றுலாவை மேம்டுத்தவும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் சர்வதேச மாநாட்டுக்கு பிரதமர் மோடி பங்கேற்க சவுதி அரேபிய இளவரசர் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு கோகலே தெரிவித்தார்.

ஹஜ் புனித பயணத்துக்கு ஆண்களின் துணையின்றி(மெஹ்ரம்) செல்ல கடந்த ஆண்டு மத்திய அரசு பெண்களுக்கு அனுமதியளித்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு 1300 பெண்கள் தனியாக ஹஜ் சென்று திரும்பினர். கடந்த ஆண்டு சவுதிஅரேபியா இந்தியர்களின் ஹஜ் பயணத்தின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.