சிறப்பு செய்திகள்

கூட்டணி வேறு-கொள்கை வேறு – சேலத்தில் முதலமைச்சர் விளக்கம்…

பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வை கழக கூட்டணியில் ேசர்த்தது ஏன்? என்று சேலத்தில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார். மேலும் அவர் கூறுகையில், கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் தெரிவித்தார்.

சேலம்

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சேலம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 18 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. 18 ஆயிரம் குழுக்களுக்கு சுமார் ரூபாய் 500 கோடி ரூபாய் இந்த ஆண்டு மட்டும் சுய உதவிக் குழுக்களுக்கு சேலம் மாவட்டத்தில் கொடுத்திருக்கின்றோம். இதுகுறித்த புள்ளிவிவரங்களை நான் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றேன். அம்மா அரசைப் பொறுத்தவரைக்கும் அதிகளவில் இதுவரை ரூபாய் 41 ஆயிரம் கோடி சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. எந்தளவிற்கு அம்மாவினுடைய அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.

கேள்வி:- அம்மாவை கடுமையாக விமர்சித்த பா.ம.க.வோடு கூட்டணி வைத்தது தொடர்பாக விமர்சனம் அதிகம் வருகிறதே?
பதில்:– கூட்டணி என்பது அனைத்திடத்திலும் மாறி, மாறி வைக்கப்படும். அதிமுக-வுடன் பா.ம.க. கூட்டணி பற்றி சொல்கிறீர்கள், அவர்கள் திமுக-வுடன் கூட்டணி வைத்தபோதும் விமர்சனம் செய்தார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. ஒவ்வொரு தேர்தல் வரும் பொழுதும் அந்தந்த கட்சி வெற்றி பெற வேண்டும், மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிவிக்க வேண்டும், அந்த அடிப்படையில்தான் கூட்டணி அமைத்திருக்கின்றோம்.

அம்மாவினுடைய அரசு மக்களுக்குத் தேவையான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் மக்களிடம் அம்மாவினுடைய அரசுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அதனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிகளவில் வெற்றி பெறுவார்கள்.

கேள்வி:- வேறு கட்சிகள் கூட்டணிக்கு வருவார்களா?
பதில்:- இன்னும் பல்வேறு கட்சிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர், வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி:- தினகரன் 38 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்: 38 என்ன, இந்தியா முழுவதும் போட்டியிடட்டும். இன்னும் அவர் கட்சியை அறிவித்திருக்கின்றாரா என்றே தெரியவில்லையே.

கேள்வி:- விரைவுச் சாலை திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவுகிறதே…
பதில்:- நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. வழக்கு முடிந்த பின்பு தான் இதைப் பற்றி சொல்ல முடியும்.

கேள்வி:- தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணியா? அதிமுக தலைமையில் கூட்டணியா
பதில்:- தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அதிமுக பெயர் இந்தியா முழுவதும் எட்டியிருக்கிறது.

கேள்வி:- அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது?
பதில்:- தமிழகத்தில் இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பா.ஜ.க., பா.ம.க.வுடன் பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. இன்னும் பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அவையெல்லாம் முடிந்த பிறகு தான் அதிமுக-விற்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரியும்.

கேள்வி:- தே.மு.தி.க.-வைப் பொறுத்தவரைக்கும் வந்தால் மகிழ்ச்சி, வரவில்லையென்றால் கவலையில்லை என்று ஜெயக்குமார் கூறியிருக்கின்றாரே?
பதில்:- அதெல்லாம் அவருடைய கருத்து. எங்களைப் பொறுத்தவரைக்கும் அனைத்து கட்சிகளும் எங்களுடைய கூட்டணியில் சேர வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். அதன் மூலமாக ஒரு மெகா கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டினுடைய திட்டங்கள் நிறைவேறுவதற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கும், புதிய, புதிய திட்டங்கள் தமிழகத்திற்கு வருவதற்கும் மத்தியிலே ஒரு வலிமையான, கூட்டணி மூலமாக அதிக எண்ணிக்கை கொண்ட நாடாளுமன்றம் இருக்க வேண்டுமென்று நாங்கள் எண்ணுகின்றோம்.

அதன்படிதான் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2014-ல் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றார்கள். இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய 3வது கட்சியாக அம்மா அவர்கள் உருவாக்கினார்கள். அதேபோல, எங்களுடைய கூட்டணியும் அதிகளவில் வெற்றி பெறும். கிட்டத்தட்ட பாண்டிச்சேரியுடன் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும்.

கேள்வி:- தொடர்ந்து இந்தக் கூட்டணி காணாமல் போகும் என்ற ஸ்டாலின் விமர்சனம் குறித்து…

பதில்:- அவர் முதலிலிருந்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி அமையும்போதும் தான் சொன்னார். நீங்கள் கூட கிண்டலும், கேலியுமாக ஊடகத்தில், விவாதத்தில் கூட சொன்னீர்கள், 10 நாள் நிற்குமா? 1 மாதம் நிற்குமா? 6 மாதம் நிற்குமா? என்று. இரண்டு வருடம் முடிந்து, மூன்றாவது வருடம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த 2021-லும் அதிமுக ஆட்சிதான். அதேபோல்தான், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் வென்றார்கள். நாங்கள் மெகா கூட்டணி அமைத்திருக்கின்றோம். புரட்சித்தலைவி அம்மா வழியிலே மக்களை சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களும், கூட்டணி வேட்பாளர்களும் களத்திலே இறங்கி, மிகப் பெரிய வெற்றியை மக்கள் எங்களுக்கு தருவார்கள்.

கேள்வி:- 7 தொகுதிகளில் நின்று போட்டியிடப் போகிறோம், ஆனால், அதிமுக ஆதரவு இல்லை என்று பேட்டியில், அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே…
பதில்:- நேற்றுதான் நாங்கள் இருவரும் எல்லா தொலைக்காட்சி, ஊடகங்களை வரவழைத்து நாங்கள் உடன்பாடு எட்டி, கையெழுத்து போட்டிருக்கிறோம் என்று சொன்னோம். உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். அதிமுக-வும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி. அதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுவிட்டது.

கேள்வி:- சமூக ஆர்வலர் முகிலன் தொடர்ந்து காணாமல் இருக்கிறார், அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்…

பதில்:- எல்லா மக்களும் இருக்கிறார்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக யாரும் பார்க்க முடியாது. அவர் எங்கு போனார் என்று அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு தகவல் கொடுத்தால் உரிய முறையிலே அரசு கண்டுபிடித்துக் கொடுக்கும். ஆனால், தனிப்பட்ட ஒருவரை, இன்றைக்கு அரசின் மீது குற்றம் சுமத்துவது தவறு. எல்லாம் ஆட்சியில் இருந்தவர்கள், வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சி மீது களங்கம் கற்பிப்பதற்காக இந்தக் குற்றச்சாட்டை சொல்கிறார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.