தற்போதைய செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரிப்பு – அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பெருமிதம்

மதுரை:-

கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை, புதிய அங்கன்வாடி மையம் மற்றும் பரவை பேரூராட்சி அரசுப்பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டடம் முதலியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்து, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஊர்மெச்சிக்குளத்தில் கோழியினம் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 560 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் வீதம் 14000 நான்கு வார கோழிக்குஞ்சுகளை நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பேசியதாவது:-

கோழியின அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக புழக்கடை கோழி வளர்ப்புத்திட்டத்தின் கீழ் 2017-18 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 2018-19-ம் ஆண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40 லட்சம் கோழிகள் ஊராட்சி பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன. 2019-20-ம் நிதியாண்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு இத்திட்டத்தின் மூலம் 25 கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 60 லட்சம் கோழிகள் வழங்கப்படும். ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் 2,40,000 மகளிருக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் சார்பில் 2011 முதல் 22.11.2019 வரை 88,94,117 நபர்களுக்கு பயிர்கடன் ரூ.47,066 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் பயிர்க்கடன் 1,24,959 நபர்களுக்கு ரூ.786.14 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி பதவியேற்ற 16.02.2017 முதல் 22.11.2019 வரை 31,68,404 நபர்களுக்கு ரூ.20,342.27 கோடி மதிப்பில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு இழப்பீடு 31.10.2019 வரை 26,14,926 விவசாயிகளுக்கு ரூ.6,123.22 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பயிர்காப்பீடு இழப்பீடு 18,922 நபர்களுக்கு ரூ.41.67 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.5,318.73 கோடி மதிப்பிலான பயிர்கடன் தள்ளுபடியின் மூலம் 12,02,075 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். கூட்டுறவு வங்கியில் 2011ம் ஆண்டு ரூ.26,245.17 கோடி வைப்புத்தொகையானது, 30.09.2019-ம் தேதிப்படி ரூ.54,697.73 கோடியாக உயர்ந்துள்ளது. 2011 முதல் 30.09.2019 வரை வழங்கப்பட்ட சிறுவணிக கடன் தொகை ரூ.1776.73 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,00,899 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுரேஷ்கிறிஸ்டோபர், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் பரவை பேரூராட்சித்தலைவர் ராஜா, பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடியின் முன்னாள் தலைவர் ராஜா, முன்னாள் துணை மேயர் திரவியம், உதவி இயக்குநர் (கால்நடைபராமரிப்புத்தறை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.