தற்போதைய செய்திகள்

கூட்டுறவு வங்கியில் தவறு செய்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை:-

கூட்டுறவு வங்கியில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலைராஜா, மாவட்ட பாசறை செயலாளர் அரவிந்தன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயர் திரவியம், பகுதி கழக செயலாளர்கள் தளபதி மாரியப்பன், செந்தில்குமார், அண்ணா நகர் முருகன், ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

எனக்கு பின்னால் கழகம் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று அம்மா சட்டசபையில் பேசிய லட்சிய முழக்கத்தை வேதவாக்காக நினைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அம்மாவின் வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. முதலமைச்சரின் சாதனை திட்டங்கள் மூலம் இன்றைக்கு கழகத்தில் இளைஞர் பட்டாளம் இணைந்து வருகின்றது. மதுரை மாவட்டத்தில் தற்போது ஒன்றரை லட்சம் பேருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் புதியதாக 25,000 இளைஞர்கள் கழகத்தில் இணைந்து உள்ளனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் மகத்தான வெற்றியை கழகம் பெற்றுள்ளது. அதேபோல் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குறிப்பாக திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக செய்த அராஜகங்களை நாடே பார்த்து சிரித்தது. திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் ரவுடிகளை வைத்து மக்களை பயமுறுத்துவார்கள். அப்போது ஸ்டாலின் வாய் திறந்தரா? இன்றைக்கு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா 2011-ம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்கும் போது கூட்டுறவு வங்கியில் மொத்த டெபாசிட் தொகை ரூ.26,000 கோடியாக இருந்தது. அம்மா எடுத்த சீர்திருத்த நடவடிக்கையால் கூட்டுறவு வங்கிகள் தேசிய வங்கிக்கு இணையாக கணினி மயமாக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல வசதிகள் மூலம் இன்றைக்கு கூட்டுறவு வங்கியில் டெபாசிட் தொகை 50,000 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் புரட்சித்தலைவி அம்மா சாலையோர சிறு வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் 5000 ரூபாய் திட்டத்தை வழங்கினார். அதனை தொடர்ந்து 10,000 ரூபாயாக உயர்த்தினார். தற்போது முதலமைச்சர் 2017-ம் ஆண்டு அந்த சிறுவணிக கடனை 20,000 ரூபாயாக உயர்த்தினார். தற்போது 50,000 ரூபாயாக உயர்த்தி கொடுத்துள்ளார். அதேபோல் வீட்டு அடமான கடன் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு வணிக கடனுக்காக மட்டும் நடப்பாண்டில் ரூ.435 கோடி ஒதுக்கப்பட்டு இதுவரை ரூ.190 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கியில் வழங்கப்படும் கடன்களை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கண்காணிப்பார்கள். அப்படி கண்காணித்ததில் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு வங்கியில் வங்கி ஊழியர் ரூ.60 லட்சம் வரை செய்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் தற்போது வரை ரூ.30 லட்சம் வரை மீட்க பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ. 30 லட்சம் விரைவில் மீட்கப்படும். கூட்டுறவு வங்கியை பற்றி பொதுமக்கள் கவலைப்படக் கூடாது. தனியார் வங்கியில் தான் கொள்ளை சம்பவம் நடைபெறும். இதுபோன்ற சம்பவம் கூட்டுறவு வங்கியில் நடைபெறவில்லை. கூட்டுறவு வங்கியில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.