தற்போதைய செய்திகள்

கேங்மேன் எழுத்து தேர்வு தேதி இன்னும் பத்து நாளில் அறிவிப்பு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

கேங்மேன் எழுத்து தேர்வு தேதி இன்னும் 10 நாளில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

பள்ளிப்பாளையத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்படுகிறது. பெண்கள் நலனே குறிக்கோளாகக் கொண்டு அம்மா அரசு இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும்.

இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு தான். அதுவும் கோவையில் உள்ள காவல் நிலையத்திற்கு மத்திய அரசு விருது அளித்துள்ளது. திமுகவை பொறுத்தவரை அரசியல் செய்வதற்காக ஏதாவது ஒரு தவறான பொய் பிரச்சாரத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது மக்கள் மத்தியில் எடுபடாது. நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலும் இதற்கு சான்று.

தமிழக அரசு நாமக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் காவேரி ஆற்றை பாதுகாக்க சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்கனவே அம்மா அவர்கள், 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். நாமக்கல் மாவட்டத்திற்கு ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சாய ஆலைகள் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு சிறிது கால தாமதமாகி வருகிறது. சாய ஆலை உரிமையாளர்கள் விரைவில் அதற்குரிய இடத்தை பெற்றுத் தரவேண்டும். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் வாங்கப்பட்டுள்ளது. இங்கு பொது சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் எழுத்து தேர்வு இன்னும் பத்து நாளில் அறிவிப்பு வெளியாகும். உதவி பொறியாளர் மற்றும் அஸசர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வை நடத்த உள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்திற்கு உரிய தேர்வுகளை நடத்த இருப்பதால், மின்வாரிய தேர்வுகளை தன்னால் நடத்த முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எனவே நாங்கள் பிற அரசுத்துறை நிறுவனங்களுடனும் மத்திய அரசு நிறுவனங்களிடமும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான தேர்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வந்துள்ளது பெருமை அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரியத்தை ஒரு வல்லரசு நாட்டின் அதிபர் பாராட்டி உள்ளார். நம் நாட்டிற்கு இது பயனுள்ளதாக இருக்கும். பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் எள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பாசன நிலங்களுக்கு நீர் வழங்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.