சிறப்பு செய்திகள்

கேரளாவில் மு.க.ஸ்டாலின் ஆதரவு காங்கிரசுக்கா- கம்யூனிஸ்டு கட்சிக்கா ?முதலமைச்சர் கேள்வி ?

அரியலூர்:-

கேரளாவில் தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கா, கம்யூனிஸ்டு கட்சிக்கா என்று மு.க.ஸ்டாலின் விளக்குவாரா என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் பி.சந்திரசேகரை ஆதரித்து, அரியலூரில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி பிரச்சாரம் செய்து பேசியதாவது:-

இப்போது நடைபெறவுள்ள தேர்தல் மத்தியில் அமையவுள்ள அரசுக்கானது. வலிமையான பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகத்தில், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அதில் இணைந்துள்ள ம.தி.மு.க., ஈரோடு தொகுதியில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிடுகிறது.

ஸ்டாலின் தமிழகத்தில் அமைத்துள்ள கூட்டணியில் இணைந்துள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்கிறது. ஆனால் கேரளாவில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஓட்டு கேட்கின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக கேரளாவில் போட்டியிடும் ராகுல்காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு மூச்சுடன் செயல்படுகின்றன. எனவே தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓட்டு கேட்கும் ஸ்டாலின், கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்பாரா? அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டு கேட்பாரா என்பதை பொதுமக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த தி.மு.க., அவர்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கவில்லை. நாம் அமைத்துள்ள கூட்டணி, மக்களுக்கு சேவை செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்தால் அதன் மூலம் தமிழக மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை கேட்டு பெற முடியும் என்ற நோக்கத்துடன், தமிழகத்தில் கழகம் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

கிராம மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டி தருவது. விவசாயிகளின் நலனுக்காக, சென்னை அருகே மிகப் பெரிய உணவு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் மாவட்டம் தோறும் உள்ள விவசாயிகள் ஆன்லைன் மூலம் தமது விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யலாம். உரிய விலை இல்லை என்றால், தமது விளை பொருட்களை தமது மாவட்டத்தில் உள்ள குளிர்பதன கிடங்கில் ஒரு மாதம் வரை வாடகை இல்லாமல் இருப்பு வைத்து கொள்ளலாம்.

2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க., ஆட்சியில், தொடர் மின் வெட்டு நிலவியது. ஆனால் புரட்சிதலைவி அம்மா தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மின்வெட்டு முழுவதுமாக நீங்கியது. தமிழக மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும், தற்போது தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசின் சாதனைகள் தொடர மத்தியில் திறமையான பிரதமர் மோடியின் நல்லாட்சி நீடிக்க, சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் பி.சந்திரசேகருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும் படி கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தியுள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும் பட்டியல் இட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராமஜெயவேல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.எம்.குமார், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் நடராஜன், கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.