இந்தியா மற்றவை

கேரளாவில் கனமழை: பிரமாண்டமான இடுக்கி அணை மீண்டும் திறப்பு…

கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசியாவிலேயே பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது.மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. 368 பேர் உயிரிழந்தனர். ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால் கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இடுக்கி, எடமலையார் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரியாறு வழியாக வந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.

கடும் வெள்ளம் வந்ததால் கொச்சி நகரம் வெள்ளத்தில் மிதந்தது. கடும் மழை காரணமாக இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பெரும் மழை பெய்து ஒரே நேரத்தில் அணைகள் திறக்கப்பட்டதால் வெள்ளம் ஏற்பட்டடதாக புகார் எழுந்தது. அணைகளை சரியான முறையில் கையாளவில்லை என மாநில அரசு மீது புகார் கூறப்பட்டது. இந்த வெள்ளம் மனித தவறால் நடந்தது என கேரள எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

வெள்ள பாதிப்பில் இருந்து தற்போதுதான் கேரளா மீண்டுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இங்கு 2 மாவட்டங்களுக்கும் வருகிற 7-ந்தேதி வரை ரெட் அலர்ட் எனப்படும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.அணையின் ஒரே ஒரு ஷெட்டர் மட்டும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விநாடிக்கு 50 ஆயிரம் லிட்டர் வீதம் முதல்கட்டமாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பெரியாறு செல்லும் செல்லும் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.